குத்துச்சண்டை: நிஷாந்த் தேவ் அபாரம்

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான குத்துச்சண்டை 71 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், ஈகுவடாரின் ஜோஸ் கேப்ரியல் ரோட்ரிக்ஸ் டெனோரியோ மோதினர். நிஷாந்த் தேவ் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

* பெண்களுக்கான 50 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீன், சீனாவின் வு யு மோதினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகாத் ஜரீன் 0-5 என தோல்வியடைந்து வெளியேறினார்.

இம்முறை குத்துச்சண்டையில் லவ்லினா (75 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ) காலிறுதிக்கு முன்னேறினர்.

டேபிள் டென்னிஸ்: ஸ்ரீஜா ஏமாற்றம்
டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சீனாவின் யிங்ஷா சன் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்ரீஜா 0-4 (10-12, 10-12, 8-11, 3-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். டேபிள் டென்னிஸ் ஒற்றையரில் இந்திய நட்சத்திரங்களின் பங்களிப்பு முடிவுக்கு வந்தது.
வில்வித்தை: பிரவீன் தோல்வி
ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், சீனாவின் காவ் வென்சாவ் மோதினர். இதில் ஏமாற்றிய பிரவீன் 0-6 (28-29, 29-30, 27-28) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

விபத்தில் தப்பிய திக் ஷா
பெண்களுக்கான கோல்ப் போட்டியில் பங்கேற்கும் இந்தியாவின் திக் ஷா, தனது பெற்றோர், சகோதரருடன் காரில் சென்ற போது, முன்னே சென்ற காரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் திக் ஷாவின் தாயாருக்கு முதுகெலும்பு பகுதியில் லேசான காயம் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் காயமின்றி தப்பினர். இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் திக் ஷா, நலமுடன் இருப்பதாகவும், திட்டமிட்டபடி போட்டியில் பங்கேற்பார் என அவரது தந்தை நரேன் தாகர் தெரிவித்துள்ளார்.

Advertisement