மாரத்தான்: எத்தியோப்பிய வீரர் சாதனை

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் டமிராட் டோலா தங்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் பந்தய துாரத்தை 2 மணி நேரம், 06 நிமிடம், 26 வினாடியில் அடைந்த எத்தியோப்பியாவின் டமிராட் டோலா தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தவிர இவர், இலக்கை அதிவேகமாக கடந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். இதற்கு முன் பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) கென்யாவின் சாமுவேல் கமாயு வான்ஜிரு, இலக்கை 2 மணி நேரம், 06 நிமிடம், 32 வினாடியில் கடந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது.


பெல்ஜியத்தின் பஷிர் அப்தி (2 மணி நேரம், 06 நிமிடம், 47 வினாடி), கென்யாவின் பென்சன் கிப்ருடோ (2 மணி நேரம், 7 நிமிடம்) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். கடந்த இரண்டு ஒலிம்பிக்கில் (2016, 2020) தங்கம் வென்ற கென்யாவின் எலியுட் கிப்சோஜ், போட்டியை நிறைவு செய்ய முடியாமல் ஏமாற்றினார்.

ஒலிம்பிக் அரங்கில் ஆண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் எத்தியோப்பியாவுக்கு 5வது தங்கம் கிடைத்தது. கென்யா, அமெரிக்கா, பிரான்ஸ் தலா 3 தங்கம் கைப்பற்றின.

Advertisement