இமேன் கெலிப் 'தங்கம்': பாலின சர்ச்சையை கடந்து அபாரம்

பாரிஸ்: பாலின சர்ச்சையை கடந்த இமேன் கெலிப், தங்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக் பெண்கள் குத்துச்சண்டை 'வெல்டர்வெயிட்' 66 கிலோ பிரிவு பைனலில் அல்ஜிரியாவின் இமேன் கெலிப், சீனாவின் லியு யங் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய கெலிப் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். உலக சாம்பியன்ஷிப் (2022) போட்டியில் வெள்ளி வென்ற கெலிப், ஒலிம்பிக்கில் தனது முதல் பதக்கத்தை கைப்பற்றினார்.

சமீபத்தில் முடிந்த 'ரவுண்ட்--16' போட்டியில் இமேன் கெலிப், இத்தாலியின் ஏஞ்சலா கரினிக்கு சரமாரியாக குத்துவிட்டார். இதனால் ஏஞ்சலா தடுமாறினார். 46 வினாடிகள் மட்டும் தாக்குப்பிடித்த இவர், போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

டில்லி, உலக குத்துச்சண்டை போட்டியின் (2023) போது நடந்த பாலின சோதனையில் இமேன் கெலிப்புக்கு ஆண் தன்மைக்குரிய 'டெஸ்டோஸ்டிரான்' அளவு அதிகமாக இருந்ததால், 'பயோலிஜிக்கல்' ஆண் என குறிப்பிடப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. பெண்களுக்கான குத்துச்சண்டையில் இவர் பங்கேற்றதால் பாலின சர்ச்சை எழுந்தது. இருப்பினும் கெலிப், தங்கம் வென்று சாதித்தார்.

கெலிப் கூறுகையில்,''நான் பெண்ணாக பிறந்தேன். பெண்ணாக வாழ்கிறேன். ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்க எனக்கு அனைத்து தகுதியும் உண்டு. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற எனது கனவு நனவாகியுள்ளது,''என்றார்.

Advertisement