சுருளியாறு மின்நிலைய ரோட்டில் பகலில் உலாவரும் யானைகள் - அச்சத்தில் மின் பணியாளர்கள்

கூடலுார், : சுருளியாறு மின் நிலைய ரோட்டில் பகலில் யானைகள் உலா வருவதால் பணிக்கு செல்லும் மின் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் அருகே சுருளியாறு வனப்பகுதியில் 35 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளது.

இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்கு அப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரவில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் மின் பணியாளர்கள் வெளியில் வருவதில்லை.

கடந்த சில நாட்களாக பகல் நேரத்திலேயே குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து சுருளியாறு மின் நிலையம் செல்லும் ரோட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உலா வந்த வண்ணம் உள்ளன. இதனால் அவசரப் பணிக்காக வெளியில் வர முடியாமல் மின் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மின் பணியாளர்கள் கூறும்போது:

வனப்பகுதியில் மின்நிலையம் அமைந்துள்ளதால் யானைகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கடந்த சில நாட்களாக மின்நிலைய ரோட்டில் மரங்களை சாய்த்தும், தொடர்ந்து ரோட்டிலேயே முகாமிட்டும் வருகின்றன.

இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மின் நிலையம், குடியிருப்பு பகுதிகள், குள்ளப்பகவுண்டன்பட்டிலிருந்து மின் நிலையம் வரையுள்ள ரோட்டின் இரு பகுதிகளிலும் அகழி, சோலார் மின் வேலி அமைக்க வனத்துறையினர் முன்வர வேண்டும். மேலும் இரவு 8 மணிக்கு சுருளியாறு மின் நிலையம் வரும் அரசு பஸ்சை யானை தொந்தரவிலிருந்து தவிர்க்க மாலை 6 மணிக்கு முன்னதாக சுருளியாறு மின்நிலையம் வர போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement