விவரிக்க முடியாத வலியும், சோகமும்

எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோவை, அவினாசி ரோட்டில் ஒரு பூனை, அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அதை எடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்த சில வினாடிகளில், என் கையிலே, அதன் இறுதிமூச்சு நின்றுவிட்டது. ஐந்து நிமிடத்திற்கு முன்பு கொண்டு வந்திருந்தால் பிழைக்க வைத்திருக்கலாம் என மருத்துவர் கூறியதும், இதயமே நொறுங்கிவிட்டது.


இந்த பூனையை போல எத்தனையோ விலங்குகள் விபத்தில் சிக்கி, இறந்தும், உயிர்பிழைத்தாலும் வலியோடும், பசியோடும் வாழ்கின்றன. இவைகளை மீட்டு, மறுவாழ்வு தர வேண்டுமென முடிவெடுத்து துவங்கியது தான், ' தி பிளானடிக் பவுண்டேஷன்'. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 10 ஆயிரம் விலங்குகளுக்கு, மறுவாழ்வு கொடுத்திருக்கிறோம் என்றார், பவுண்டேஷன் உரிமையாளர் ஆஷ்ட்லின்.

உங்களை பற்றி...



ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து, பெங்களூருவில் 'செப்'பாக வேலை பார்த்தேன். கொரோனா சமயத்தில், கொத்து கொத்தாக மனித மரணங்கள் அரங்கேறிய தருணத்தில், என் கவனம் மட்டும் ஆதரவற்ற தெருநாய்களின் பக்கம் திரும்பியது. உணவில்லாமல் தவித்த தெருநாய்களுக்கு உணவளித்தேன்.

பீளமேட்டில், பிறந்து 5 நாட்களே ஆன, பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட பப்பி இருப்பதாக தகவல் கிடைத்ததும், வீட்டிற்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்து உணவளித்தேன். இறந்துவிடும் நிலையில் இருந்த பப்பியின் உடல்நிலை, இரு வாரங்களில் மெல்ல தேறியது. இப்படியாக நிறைய நாய்கள் வீட்டிற்கு கொண்டுவர துவங்கினேன். இடப்பற்றாக்குறையால், வாடகைக்கு இடம் எடுத்து, தங்க வைத்தேன். என் பணிகளை பார்த்து, ஓய்வு பெற்ற சுங்கத்துறை அதிகாரி முத்துசாமி, சூலுார், செங்கத்துறையில், ஒரு ஏக்கர் இடத்தை, 10 ஆண்டுகளுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளுமாறு கூறி, சில அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இங்கு தற்போது, 34 ஊனமுற்ற தெருநாய்கள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் பின்னணியிலும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியும், சோகமும் நிறைந்திருக்கிறது. மூன்று வேளை உணவு, மருத்துவ உதவிகளையாவது செய்ய வேண்டுமென ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எங்கேயாவது அடிப்பட்ட விலங்குகள் இருப்பதாக தகவல் தெரிந்தால், என்னோடு, பவுண்டேஷனில் இணைந்துள்ள அகஸ்ஸி, கணேசன் என மூன்று பேரும், களத்திற்கு நேரில் சென்று, உடனே மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்வோம்.

நாய் மட்டுமல்லாமல், பூனை, குதிரை, மாடு, பறவைகள் என, 10 ஆயிரத்துக்கும் மேலான விலங்குகளை மீட்டு, மறுவாழ்வு கொடுத்திருக்கிறோம்.

மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு இருக்கிறதா?



நாய், பூனைகளை மீட்கும் போது எந்த பிரச்னையும் இல்லை. பறவைகள் அடிபட்டால், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சிகிச்சை அளித்து, மீண்டும் அதை பறக்கவிட்டுவிடுவோம். கீரி, உடும்பு போன்ற வனவிலங்குகளை அதன் ரத்தம், இறைச்சிக்காக வேட்டையாடும் போது, மீட்பு பணிகளில் களமறிங்குவது தான் சற்று ரிஸ்கான விஷயமாக இருக்கும். கடத்தலில் ஈடுபடுவோரை அடையாளம் காட்டுவதோடு, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, மீட்பு பணிகளில் களமிறங்குவோம்.

பொதுமக்களிடம் உங்களின் எதிர்பார்ப்பு



எங்கேயாவது வனவிலங்குகள் அடிபட்டு கிடந்தால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள். ஐந்தறிவு ஜீவன்களின் கண்ணீருக்கும் மதிப்பளியுங்கள். உங்களால் முடியாவிடில், 86102 52025 என்ற எண்ணிற்காவது தகவல் தெரிவியுங்கள்.

Advertisement