மீன் தொட்டி தண்ணீரை மாற்றக்கூடாது - சொல்கிறார் 'வேதா'

''தண்ணீர் தான் மீன்களின் வாழ்விடம். இதை அவ்வப்போது மாற்றி கொண்டே இருப்பது, அதன் வீட்டை, அடிக்கடி இடித்து கட்டுவதற்கு நிகரானது. இதனால் கூட, மீன்கள் இறக்கும் அபாயம் உள்ளது,'' என்கிறார் அருப்புக்கோட்டை, வேதா மீன் பண்ணை உரிமையாளர் வேதா. வீட்டில் அக்குவாரியம் செட் -அப் உருவாக்குவதுபற்றி, அவர்நம்மிடம் பகிர்ந்தவை:

* புதிதாக தொட்டி வாங்கும் போது, மீன் பண்ணையில் இருந்து சிறிதளவு தண்ணீர் எடுத்து வந்து, அதனுடன் போதியளவு ஆர்.ஓ., தண்ணீர், சிறிது மீன் உணவு சேர்த்து ஒரு மாதம் வரை, அப்படியே வைத்திருக்க வேண்டும்.

* மீன்களின் வளர்ச்சிக்கு, சில பாக்டீரியாக்கள் உதவிபுரியும். இதை தொட்டியில் உற்பத்தி செய்ய, பிரத்யேக 'லிக்விட்' கடைகளில் கிடைக்கின்றன. தினசரி ஒரு ஸ்பூன் வீதம், 10 நாட்களுக்கு, தொட்டி தண்ணீரில் சேர்க்க வேண்டும்.

* இப்படி தொட்டியின் தண்ணீரை, மீன் வளருவதற்கு ஏற்ற வகையில் மாற்றிய பிறகு, புதிய மீன்களை உள்ளே விடுவதே சிறந்தது.

* இரண்டு அடி தொட்டி வாங்கினால் அதன் உயரம் ஒரு அடியாவது இருக்க வேண்டும். இதனுள், அதிகபட்சம் 4 இன்ஞ் அளவுள்ள கற்கள், சில வகை செடிகள் வைக்கலாம். அதிகபட்சம் ஆறு மீன்கள் மட்டுமே விட வேண்டும்.

* மீன் வெளியிடும் கழிவான அமோனியா, குறிப்பிட்ட நேரத்திற்குள் நைட்ரைட்டாக மாறிவிடும். இது, மீன்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

* இதை தடுக்க, சில வகை பாக்டீரியாக்கள் உதவிபுரியும் என்பதால் தான்,புதிதாக தொட்டி வாங்கும் போதே, அதில் 'பாக்டீரியா லிக்விட்' ஊற்ற பரிந்துரைக்கப்படுகிறது.

* வீட்டில் வைக்கப்படும் தொட்டியில், கோல்டு, கொய்க், சார்க் வகை மீன்களை வளர்க்க கூடாது. இவை, 'பான்ட்' மாதிரியான அமைப்பில் வளரக்கூடியவை.

* தண்ணீர் தான் மீன்களின் வாழ்விடம். இதை அவ்வப்போது மாற்றுவது, அதன் வீட்டை அடிக்கடி இடித்து கட்டுவதற்கு நிகரானது. மேலும், மீன்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தொட்டியில் உற்பத்தியாக, மூன்று மாதங்களாகும். தொட்டியில் கழிவுகள் அதிகம் சேர்ந்தாலோ, தண்ணீர் தெளிவின்றி காணப்பட்டாலோ, பாக்டீரியாக்கள் அத்தண்ணீரை மீண்டும் சுத்திகரித்துவிடும். எனவே தொட்டி நீரை மாற்ற தேவையில்லை.

Advertisement