உஷார்; உமிழ்நீரில் இருந்துகூட ரேபிஸ் பரவும்! - தடுப்பூசியே தற்காப்பு ஆயுதம்

இன்று (செப். 28ம் தேதி) உலக ரேபிஸ் தினம்-

- -விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொடூரமான வைரஸ்களின் பட்டியலில் ரேபிஸ் தான் முன்னிலையில் உள்ளது. இது, நாய், பூனை, வவ்வால், நரி உள்ளிட்ட விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, அதன் ஆரோக்கியத்தை சீர்குலைப்பதோடு, வாழ்நாளையும் குறைத்துவிடுகிறது. மற்ற விலங்குகளை காட்டிலும், நாய், பூனைகளுடன் மனிதர்கள் நெருக்கமாக பழகுவதோடு, செல்லப்பிராணியாகவும் வளர்க்கின்றனர்.

பாதிக்கப்பட்ட விலங்குகளின் மூளை மற்றும் எச்சிலில், ரேபிஸ் வைரஸ் தங்கி இருப்பதால், அவை கடித்தால், எளிதில் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய விலங்குகளுக்கு, காய்ச்சல், வாந்தி, பசியின்மை போன்றவை ஆரம்பகால அறிகுறிகளாகும். தொற்றின் தன்மை தீவிரமடையும் பட்சத்தில், பெருமூளை செயலிழப்பு, பக்கவாதம், சுவாசிப்பது, விழுங்குவதில் சிரமப்படுதல், அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, அசாதாரணமாக நடந்து கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

கடந்த இரு ஆண்டுகளாக (2023, 2024) தமிழகத்தில் மட்டும், 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர், நாய்கடி சிகிச்சை பெற்றிருப்பதாக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இதில், 2013 ல் மட்டும், 18 பேர், ரேபிஸால் இறப்பை தழுவியுள்ளனர். இதை கட்டுக்குள் கொண்டுவரும் தற்காப்பு ஆயுதமாக இருப்பது, தடுப்பூசி போடுவது மட்டுமே.

வீட்டிற்குள்ளே வைத்து நாய், பூனை வளர்க்கும் சிலர், தங்களின் செல்லப்பிராணி வெளியிடங்களுக்கு செல்வதில்லை என கூறி, ரேபிஸ் தடுப்பூசி போட தயங்குகின்றனர். இது முற்றிலும் தவறானது. பாதிக்கப்பட்ட ஒரு விலங்கின் உமிழ்நீரில் இருந்து கூட, ரேபிஸ் பரவும் என்பதை மறக்க வேண்டாம்.

எனவே, பப்பியை பொறுத்தவரை, மூன்றாவது மாதத்தில் ரேபிஸ் தடுப்பூசி போடுவதோடு, அதன்பின் 21 நாட்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசியும், ஆண்டுக்கு ஒருமுறை ரேபிஸ் பூஸ்டர் தடுப்பூசியும், கட்டாயம் போடவேண்டும்.

பூனைகளுக்கு, மூன்றாவது மாதத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட்டு, பின் ஆண்டுக்கு ஒருமுறை ரேபிஸ் பூஸ்டர் தடுப்பூசி போட்டால் போதுமானது. தடுப்பூசி போட்ட பிறகு, நாய், பூனை கடித்தால், ரேபிஸ் வைரஸ் பரவுமோ என்ற அச்சத்தில் இருந்து விடுபடலாம்.

செல்லப்பிராணிகளை போல, தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம். பல தன்னார்வ அமைப்புகள், கால்நடை மருத்துவமனைகள், இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி முகாம் அவ்வப்போது நடத்துகின்றன. அரசு மருத்துவமனைகளில், இச்சேவையை இலவசமாக பெறலாம். உலக ரேபிஸ் தினமான இன்று, செல்லப்பிராணியோடு உங்களின் நலனுக்காகவும், ரேபிஸ் தடுப்பூசி போடுவதோடு, பிறருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். ஏனெனில், உயிர் விலைமதிப்பற்றது அல்லவா!

-- டாக்டர் ஆர். சக்ரவர்த்தி,
கால்நடை மருத்துவர், கோவை

Advertisement