பத்தாண்டில் சத்தான சாதனை: 'மேக் இன் இந்தியா' மவுசு கூடுது
புதுடில்லி: 'மேக் இன் இந்தியா' திட்டம் துவங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அத்திட்டத்தால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம், ஏற்றம் குறித்த பல தகவல்கள் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்களிலேயே மிக முக்கியமான திட்டம் 'மேக் இன் இந்தியா' திட்டம். பொருள்களுக்கும் சேவைகளுக்கும் பிற நாடுகளை சார்ந்திருப்பதை மாற்றி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றி, பொருளாதாரத்தில் வலுவடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே இதன் இலக்கு. இத்திட்டம் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இத்திட்டம் துவங்கியதற்கு முன்பாகவும், துவங்கிய பிறகான இந்த 10 ஆண்டுகளிலும் இந்திய பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. பி.ஐ.பி., ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு வெளியிட்ட பல்வேறு அறிக்கைகளை கொண்டு வெளியான இந்த ஆய்வறிக்கையில் 2014க்கு முன்பாக இருந்ததைவிட 2024ல் பொருளாதாரத்தில் 'மேக் இன் இந்தியா' திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி
2014ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) ரூ.1.12 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.2.95 கோடியாக அதிகரித்துள்ளது. அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருவாய் 36 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2024ல் 70.94 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேபோல் ஏற்றுமதியில் 3.14 லட்சம் மில்லியன் வருவாய் கிடைத்த நிலையில் தற்போது 4.37 லட்சம் மில்லியனாக உயர்ந்துள்ளது.
வரிகள் மூலம் கிடைத்துள்ள வருவாய் கணக்கில் கொள்ளும்போது 2014ல் ரூ.11.38 லட்சம் கோடியாக இருந்தது; 2024ல் ரூ.34.37 லட்சம் கோடியாக அதிகரித்தது. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 500க்கும் குறைவாகவே இருந்த நிலையில் தற்போது 1.4 லட்சத்திற்கும் மேலான ஸ்டார்ட்அப்கள் உருவாகியுள்ளன.
எலக்ட்ரானிக்ஸ்
எலக்ட்ரானிக்ஸ் துறையானது மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 10 ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது, 2014ல் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி வெறும் 29.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது 102 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மொபைல் போன் தயாரிப்புகளும் முன்பு ரூ.18,900 கோடியாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் ரூ.4.2 லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. 2014ல் ரூ.1,566 கோடியாக இருந்த மொபைல் போன் ஏற்றுமதி, 2024ல் ரூ.1.29 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல், பொம்மைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியும் நம் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில் 2014ல் 96 மில்லியன் டாலர் அளவிற்கே பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் 'மேக் இன் இந்தியா' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தற்போது 326 மில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2014ல் 81.69 டன்னாக இருந்த உருக்கு உற்பத்தி, தற்போது 127.2 டன்களாக அதிகரித்துள்ளன. இப்படி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய இந்த 10 ஆண்டுகளில் எவ்வளவோ மைல்கல்லை எட்டியும், பொருளாதாரம் மேம்பட்டும் வருகின்றது.