200 தொகுதியில் வெற்றிக்கு உத்தரவாதம்; உற்சாகத்தில் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 'அடுத்து வரும் தேர்தலில் நிச்சயம் 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்ற உற்சாக குரலுடன் அரியலூர் மக்கள் உத்தரவாதம் அளித்ததாக, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி. நான் கோவை, விருதுநகரை தொடர்ந்து வரும் நவ., 28, 29ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கு நேரில் சென்று மக்கள், கட்சியினரை சந்திக்கப் போகிறேன்.
மக்கள் மகிழ்ச்சியுடன் கை அசைத்து ஆரவாரம் செய்தனர். “இனி எப்போதும் நம்ம ஆட்சிதான்”, “திராவிட மாடல் ஆட்சி சூப்பர்.. அடுத்ததும் நாமதான்” என்றனர். 234 தொகுதிகளில் 200க்கு மேல் நாம் வெற்றி பெறவேண்டும் என்ற இலக்குடன் நான் வலியுறுத்தி வருவதை மனதில் வைத்து, “நிச்சயம் 200 ஜெயிப்போம்” என்று உற்சாகக் குரலுடன் உத்தரவாதம் அளித்தனர்.
மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவசமடைந்ததுடன், மக்களுக்கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன்.
வழிநெடுக மக்கள் நின்று வரவேற்பளிப்பதை, இன்றைய அரசியல் களத்தில், 'ரோடு ஷோ' என்கிறார்கள். ஷோ என்றால் காட்சி எனப் பொருளாகும். நம்மைப் பொறுத்தவரை, இது வெறும் காட்சியும் அல்ல, மக்கள் நமக்கு காட்சிப் பொருளுமல்ல. திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்குக் கிடைக்கின்ற மகத்தான வரவேற்பு.
தி.மு.க அரசின் திட்டங்களால் பயன் பெற்று வரும் மக்களின் திருவிழாக் கொண்டாட்டம். வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடியாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும்.
அரியலூர், பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15ம் தேதி அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் வந்து உடன்பிறப்புகளாம் உங்களைக் கண்டு மகிழ்வேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.