மாநகராட்சியுடன் 16 கிராமங்களை இணைக்க முடிவு: தேர்தல் நெருங்குவதால் வார்டு வரையரை தீவிரம்

கடலுார்: தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைவதால் மாநகராட்சி, நகராட்சிகளில் அருகில் உள்ள கிராமங்கள் இணைக்கும் பணி தீவிரமாகியுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்பில் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,524 கிராம ஊராட்சிகள், சென்னை மாவட்டம் தவிர்த்து 36 மாவட்ட ஊராட்சி குழுக்கள் உள்ளன.

ஊரக உள்ளாட்சிகளான கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமான தேர்தல்கள் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடந்தது.

டிசம்பர் 27ம் தேதி முதல் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது. அதில் 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சித் தலைவர்கள், 37,830 கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என, மொத்தம் 45,336 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

இரண்டாம் கட்டத் தேர்தல் 2019, டிச., 30ம் தேதி 46 ஆயிரத்து 639 பதவிகளுக்கு தோ்தல் நடந்தது. அதில் 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இதையடுத்து பதவி காலியாகும் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இதனிடையே புதிதாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்றவை தரம் உயர்த்தி அரசு அறிவித்தது. அதன் காரணமாக மாநகராட்சிகளில் பல ஊராட்சிகள் சேர்க்கப்பட உள்ளன. இதனால் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.

கடலுார் மாவட்டத்தை பொறுத்தவரை கடலுார் மாநகராட்சியாகவும், வடலுார், திட்டக்குடி நகராட்சியாகவும் தரம் உயர்த்தி அறிவித்தது. கடலுார் மாநகராட்சியில் தற்போது பரப்பளவு 27.65 சதுர கி.மீட்டராக உள்ளது. இந்த பரப்பளவை அதிகரிக்க அருகில் உள்ள கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

கடலுார் நகராட்சி அருகில் உள்ள பெரியகங்கணாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு, குண்டுஉப்பலவாடி, பச்சையாங்குப்பம், குடிகாடு, கடலுார் முதுநகர், கரையேறவிட்டகுப்பம், அரிசிபெரியாங்குப்பம், திருவந்திபுரம், பாதிரிக்குப்பம், தோட்டப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு, மருதாடு, வெள்ளப்பாக்கம், சேடப்பாளையம், காரைக்காடு மற்றும் செம்மங்குப்பம் ஆகிய 19 கிராமங்களையும் ஒருங்கிணைத்து கடலுார் மாநகராட்சியாக தரம் உயர்த்தலாம் என மாநகராட்சியில் கடந்த 23.9.2021ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் சேடப்பாளையம், காரைக்காடு, செம்மங்குப்பம் ஆகிய கிராமங்களில் அதிகளவில் விவசாயம் நடந்து வருவதால் அக்கிராமங்களை இணைக்காமல் பட்டியலில் இருந்து நீக்கி மீதியுள்ள 16 கிராமங்களை மாநகராட்சியில் சேர்க்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் பின், மாவட்ட ஊராட்சி வார்டு வரையரை செய்யப்படும்.

Advertisement