பஸ் ஓட்டுனர், நடத்துனரை தாக்கிய நால்வருக்கு வலை

திருத்தணி : ஞ்சிபுரம் மாவட்டம், வதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு, 42; அரசு பேருந்து ஓட்டுனர். காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு, 42; அரசு பேருந்து நடத்துனர். இருவரும் நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில் இருந்து, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் அரசு பேருந்து எண்:'212எச்' பேருந்தில் பணிபுரிந்தனர்.

நேற்று முன்தினம், இரவு 9:30 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருப்பதி நோக்கி புறப்பட்ட பேருந்தில், திருத்தணி பகுதியைச் சேர்ந்த நான்கு வாலிபர்கள் ஏறினர்.

நடத்துனர் அன்பரசு மேற்கண்ட நால்வரிடம் டிக்கெட் கேட்ட போது தகராறு செய்தனர். இதையடுத்து, பேருந்து நடத்துனர், காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், காஞ்சிபுரம் பைபாஸ் அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் போலீசார் தகராறு செய்த நான்கு வாலிபர்களை பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்டு, பேருந்தை அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேர் நண்பர்களுக்கு மொபைல்போன் வாயிலாக தகவல் தெரிவித்து பேருந்து எண்ணையும் கூறினர்.

அதன் படி, நேற்று முன்தினம், நள்ளிரவு, 11:45 மணிக்கு அந்த பேருந்து திருத்தணி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, திருத்தணி பகுதியைச் சேர்ந்த நான்கு வாலிபர்கள் திடீரென பேருந்தில் ஏறி, ஓட்டுனர், நடத்துனரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

இதில் நடத்துனருக்கு முகத்தில் பலத்த காயமும், ஓட்டுனருக்கு உள்காயமும் ஏற்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய நால்வரை தேடி வருகின்றனர்.

Advertisement