கண்டிகையில் அரசு பள்ளி எதிரில் ஊராட்சி அலுவலகம் கட்ட எதிர்ப்பு

திருத்தணி, : திருவாலங்காடு ஒன்றியம், என்.என்.கண்டிகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 42 மாணவ- - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஊராட்சி அலுவலக கட்டடம் சில மாதங்களுக்கு முன் இடித்து அகற்றப்பட்டது.

தற்போது, அதே பள்ளி வளாகத்தில், பள்ளியை ஒட்டி புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு ஒன்றிய நிர்வாகம் ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டது.

தகவல் அறிந்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமத்தினர், பள்ளி வளாகத்திற்கு சென்று ஊராட்சி அலுவலகம் கட்டுவதை நிறுத்த வேண்டும் என, கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர்.

அதை தொடர்ந்து கிராமத்தினர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று, கலெக்டரிடம் அரசு பள்ளி எதிரே புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதால், பள்ளி மாணவர்கள் இறைவணக்கம் செய்வது மற்றும் விளையாடுவதற்கு முடியாது.

ஆகையால், ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என கோரிக்கை தெரிவித்து, மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

குடிநீர் வசதியில்லை

அரசு தொடக்கப் பள்ளிக்கு குடிநீர் வசதி, ஆறு மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் குடிப்பதற்கு, சமையல் செய்ய உதவியாளர் தினமும், குறைந்தபட்சம், 15 குடம் தண்ணீரை குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பிடித்து வருகின்றனர். கழிப்பறையில் தண்ணீர் வசதியில்லாததால், மாணவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர்.

Advertisement