மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லை; குடும்ப நலனே முக்கியம்; ஸ்டாலின் மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்

சென்னை: 'தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, முதல்வர் ஸ்டாலின் குடும்ப நலனையே பிரதானமாக கொண்டுள்ளார்' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து, அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறி விழுந்து மரணமடைந்துள்ளார்.


குண்டும், குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக பல மாநகராட்சி பூங்காக்கள் மாறி உள்ளது.


அக்கறையில்லை




இந்த, அவல நிலையில் வைத்திருக்கும் ஸ்டாலினின் தி.மு.க., அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம். இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதல்வர் ஸ்டாலின் தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.


இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க., முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement