புதிய சொத்து வரி விதிப்பில் முறைகேடு ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு


புதிய சொத்து வரி விதிப்பில் முறைகேடு
ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு
ஓசூர், அக். 1-
ஓசூர் மாநகராட்சியில், புதிய சொத்து வரி விதிப்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக, கவுன்சிலர்கள் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சத்யா தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் ஆனந்தய்யா, கமிஷனர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மொத்தம், 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், நடந்த விவாதம் வருமாறு:
அ.தி.மு.க., கவுன்சிலர் ஜெயப்பிரகாஷ்: ஓசூர் மாநகராட்சியில், டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. தெருநாய்கள், சாலைகளில் திரியும் மாடுகளால் பாதிப்பு ஏற்படுகிறது.
கமிஷனர் ஸ்ரீகாந்த்: மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு, வீடாக டெங்கு கொசு ஒழிப்பு பணி நடக்கிறது. இதுவரை, 1,098 நாய்களுக்கு கருத்தடை செய்துள்ளோம். தெருநாய்களை கட்டுப்படுத்த மேலும் ஒரு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. சாலையில் திரியும் மாடுகளுக்கு, அபராதம் விதிக்கிறோம்.
தி.மு.க., மாதேஸ்வரன்: மண்டலம், 1 ல் புதிய சொத்து வரி விதிப்பில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. விதிமுறைகளுக்கு மாறாக உதவி கமிஷனர் டிட்டோ, சுரேஷ் என்பவருக்கு சிறப்பு வருவாய் ஆய்வாளர் பணியிடத்தை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக முதல்வரிடம் புகார் செய்வோம். டிட்டோ தலைமையிலான குழுவினர் தொழில் நிறுவனங்களுக்கு வரி விதிக்க செல்வதில்லை. வீடுகளுக்கு சென்று கூடுதல் வரி விதிப்பதாக கூறி மிரட்டி பணம் பறிக்கின்றனர். 35 ஆண்டுகளாக மாநகராட்சியிலேய ஒரு சிலர் வேலை செய்கின்றனர். ஓசூரில் துாய்மை பணியாளர்களுக்கு, 433 ரூபாய் ஊதியம் கொடுக்கின்றனர். ஈரோட்டில், 775 ரூபாய் கொடுக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டரிடம், கமிஷனர் பேசி கூலியை உயர்த்த வேண்டும்.
தி.மு.க., சென்னீரப்பா: கடந்த, 2017 ல், அ.தி.மு.க., ஆட்சியில் துாய்மை இந்தியா திட்டத்தில் குப்பை வரி விதிக்கப்பட்டது. அதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்போது, முன் தேதியிட்டு குப்பை வரியை கட்டுமாறு கூறுவதை, நிறுத்த வேண்டும்.
அப்போது குறுக்கிட்ட, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'அ.தி.மு.க., ஆட்சியில் குப்பை வரி விதிக்கப்பட்டதாலும் அதை வசூல் செய்ய நிர்பந்தம் செய்யவில்லை' என்றனர். இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
துணை மேயர் ஆனந்தய்யா: ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய் வரை மாநகராட்சிக்கு வருவாய் பாதித்தாலும் கூட, நடைபாதை வியாபாரிகளுக்காக சுங்க கட்டண ஏலம் விடவில்லை. ஆனால், தினமும் மோசடியாக லட்சக்கணக்கில் சுங்க கட்டணம் வசூலிக்கின்றனர். இது அதிகாரிகளுக்கு தெரிந்து தான் நடக்கிறது. மழைக்காலங்களில் ஓசூர் நகரம் மிதக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வெளியேறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் சத்யா: சுங்க கட்டணம் வசூல் செய்தால், போலீசில் புகார் செய்யப்படும். 54 பூங்காக்களை டெண்டர் வைத்து பராமரிக்க உள்ளோம்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
கவுன்சிலர்கள் குபேரன், ஸ்ரீதரன், அசோகா, நாராயணன், ஷில்பா சிவக்குமார், தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான், மஞ்சுளா முனிராஜ், யஷஸ்வினி, மாதேஷ், சீனிவாசலு உட்பட பலர் பேசினர்.

Advertisement