ஒரே விலையில் பட்டாசு விற்க பண்டக சாலைகளுக்கு உத்தரவு

சென்னை: 'இ.ஆர்.பி., எனப்படும், கணினி கண்காணிப்பு வாயிலாக, பட்டாசு விற்பனை மேற்கொள்ளாத கூட்டுறவு பண்டகசாலை மேலாண் இயக்குனர்கள் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவு துறை எச்சரித்துள்ளது.


கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகள், தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளை துவக்குகின்றன.


அவற்றில், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்கப்படுகின்றன. கூட்டுறவு பண்டகசாலைகள், பட்டாசு கடைகளை துவக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம்:


பட்டாசு விற்பனை தொடர்பான கொள்முதல், விற்பனை உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளும், இ.ஆர்.பி., மென்பொருளில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். விற்கப்படும் பட்டாசு வகைக்கு கணினி ரசீதுகளை மட்டுமே, நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

பண்டகசாலையின் அனைத்து கடைகளிலும், ஒரே விலையில் விற்க வேண்டும். பட்டாசு கடை அமைப்பது, அலங்கரித்தல் உள்ளிட்ட அனைத்து செலவும், விற்பனையில், 3 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.


இ.ஆர்.பி., எனப்படும் கணினி கண்காணிப்பு வாயிலாக பட்டாசு விற்பனை மேற்கொள்ளாத பண்டகசாலை செயலர், மேலாளர், மேலாண் இயக்குனர்களின் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Advertisement