ரூ.5 லட்சம் கீழ் பணம் வழங்க தள்ளுபடி திட்டத்தில் தாமதம்
சென்னை : சிறு நிறுவனங்களுக்கு விரைவாக விற்பனை பணம் கிடைப்பதற்காக துவக்கப்பட்ட வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தில், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் பணம் வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து, மத்திய, மாநில அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் பொருட்களை கொள்முதல் செய்வதுடன், பல்வேறு சேவைகளையும் பெறுகின்றன.
இதற்கான பணத்தை குறிப்பிட்ட அவகாசத்திற்குள் தராததால், சிறு தொழில் நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றன. விரைவாக பணம் கிடைக்க, தமிழக அரசின் 'பேம் டி.என்' நிறுவனம், 'டி.என்.டிரெட்ஸ்' எனப்படும் வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்கான இணையதளத்தில் அரசு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் சேர்ந்துள்ளன.
தங்களுக்கு வர வேண்டிய நிலுவை தொகை ஆவணங்களை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதனிடம் சேவை பெற்ற அரசு நிறுவனம், அதற்கு ஒப்புதல் அளிக்கும். நிலுவை தொகையை அரசு நிறுவனம் சார்பில் வங்கிகள் வழங்க முன்வந்து, ஒவ்வொரு வங்கியும் தள்ளுபடி கேட்கும். தனக்கு ஏற்ற தள்ளுபடியை நிறுவனம் தேர்வு செய்ததும், மீதி பணம் வழங்கப்படும்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர்கள் கூறியதாவது:
ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் விற்பனை பணம் கிடைக்காததால் தான், வர்த்தக வரவு தள்ளுபடி திட்டம் துவக்கப்பட்டது.
கோடிக்கணக்கில் பணம் வழங்க வேண்டிய நிறுவனங்களுக்கு விரைந்து வழங்கப்படுகிறது.
குறிப்பாக, 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கு பணம் வழங்க, வங்கிகள் ஆர்வம் காட்டுவதில்லை; பல நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, எவ்வளவு தொகையாக இருந்தாலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இம்மாதம் 15ம் தேதி வரை, வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தின் கீழ், 1,491 நிறுவனங்களுக்கு, 2,140 கோடி ரூபாயை வங்கிகள் வழங்கியுள்ளன.