செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கரும்புள்ளி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி விமர்சனம்

செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கரும்புள்ளி
அ.தி.மு.க., எம்.எல்.ஏ., முனுசாமி விமர்சனம்
ஓசூர், அக். 1-
செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியது, அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக நிலைத்திருக்கும்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட் டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக சீரான மின்சாரம் கிடைக்காததால், விவசாயிகள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், சீரான தடையற்ற மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்க வலியுறுத்தியும், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், சூளகிரியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வும்,
அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளருமான முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
துணை முதல்வர் பதவி என்பது, தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள ஒரு அரசியல் தலைவர், இன்னொரு தலைவரை உருவாக்கி இருக்கிறார். ஆசை வெட்கமறியாது என்பார்கள். செந்தில்பாலாஜியால் ஏதோ ஒரு ஆசையில் உந்தப்பட்டு, அந்த ஆசை தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர் பதவியை வழங்கி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் ரீதியாக மிகப்பெரிய தவறை செய்துள்ளார். இத்தவறு அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக நிலைத்திருக்கும். கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை கைது செய்ய, பா.ஜ., கூறுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என, காங்., கூறுகிறது. இது அரசியல் தான்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement