திருட்டுப்பயலே என திட்டியவரை கொலை செய்தவருக்கு ஆயுள்

தேனி : திருட்டுப்பயலே' என திட்டி அவமானப்படுத்தியவரை வெட்டி கொலை செய்த கம்பத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பொன்னருக்கு 35, ஆயுள் தண்டனை விதித்து தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.



தேனி மாவட்டம், கம்பம் மணிநகரம் மெக்கானிக் குபேந்திரன் 42. இவரது அண்ணன் தேங்காய் உரிக்கும் கூலித் தொழிலாளி மகேந்திரன் 45. இவர் மது பழக்கத்தால் அடிக்கடி யாரிடமாவது தகராறு செய்வது வழக்கம். 2017 செப்டம்பரில் கம்பம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னர் என்பவரிடம் பாரில் மகேந்திரன் தகராறு செய்தார்.


இதனால் ஆத்திரம் அடைந்த பொன்னர், மகேந்திரனிடம் 2 முறை தகராறில் ஈடுபட்டார். இதனை தட்டிக்கேட்ட குபேந்திரனிடம், உன் அண்ணன் என்னை திருட்டுப்பயலே' என திட்டி அவமானப்படுத்தினார். அவரை கொலை செய்யாமல் விடமாட்டேன்.' என்றார். அதற்கு குபேந்திரன் அவரை எச்சரித்துவிட்டு மகேந்திரனுடன் வீடு திரும்பினர்.

2018 ஏப்., 15ல் தேங்காய் உரிக்கச் சென்ற மகேந்திரன் வீடு திரும்பவில்லை. கம்பம் மெட்டு ரோடு ஜீப் ஸ்டாண்டு அருகே அண்ணனை தேடி குபேந்திரன் சென்றார். அங்கு அமர்ந்திருந்த மகேந்திரனை, பொன்னர் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

கம்பம் வடக்கு போலீசார் பொன்னரை கைது செய்தனர். இவ் வழக்கு தேனி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்தார்.

Advertisement