வறுமையால் கைநழுவிய ஐ.ஐ.டி., 'சீட்' ஒரே உத்தரவில் ஓகே செய்தது கோர்ட்

3

புதுடில்லி : வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், தலித் இளைஞருக்கு ஐ.ஐ.டி., சீட் மறுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு மாணவனின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் திடோரா கிராமத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார், 18.

பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ., தேர்வில் தகுதி பெற்றதை அடுத்து, அவருக்கு ஜார்க்கண்டின் தன்பாத் ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., இடம் ஒதுக்கப்பட்டது.

இடம் கிடைத்த நான்கு நாட்களுக்குள், அதாவது கடந்த ஜூன் 24ம் தேதிக்குள் 17,500 ரூபாய் கட்டினால் சீட் நிச்சயம் என்ற நிலை. கூலித் தொழிலாளியான அதுலின் தந்தை, அந்தப் பணத்தை புரட்ட முடியாமல் போனதால், அதுலின் ஐ.ஐ.டி., கனவு தகர்ந்தது.

மனம் தளராத அதுல் மற்றும் அவரது தந்தை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் கதவை தட்டினர்; ஜார்க்கண்ட் மாநில சட்ட உதவி ஆணையத்திலும் முறையிட்டனர்.

ஐ.ஐ.டி., ஒருங்கிணைந்த சேர்க்கையை சென்னை ஐ.ஐ.டி., நடத்தியதால், சென்னை நீதிமன்றத்தை அணுகும்படி, சட்ட உதவி ஆணையம் அறிவுறுத்தியது. மாநிலம் கடந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நோக்கி கை நீட்டியது சென்னை உயர் நீதிமன்றம்.

எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை லட்சியமாக கொண்ட அதுல், இறுதி நம்பிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினார்.

அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அதுல் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

'நாள்தோறும் 450 ரூபாய் கூலி வாங்கும் தந்தையால், நான்கு நாட்களில் 17,500 ரூபாய் கட்டுவது என்பது இயலாத காரியம்.

'ஆகையால், சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் நீதிமன்ற அதிகாரத்தின்படி, பட்டியல் இன மாணவருக்கு சீட் வழங்க தன்பாத் ஐ.ஐ.டி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

'தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கைக்கு தொந்தரவு அளிக்காத வகையில், சூப்பர்நியூமரரி இருக்கைபடி, மாணவருக்கு இடம் ஒதுக்கலாம்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் வாழ்த்துகளை பெற்ற அதுல், 'தடம்புரண்ட இந்த ரயில், நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பாதைக்கு திரும்பியுள்ளது' என தெரிவித்துள்ளார்.

Advertisement