2 நாளில் உடைந்த சிமென்ட் சிலாப்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் மீது சிமென்ட் சிலாப் அமைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இக்கால்வாய் ரங்கசாமி குளம் அருகில், திறந்து கிடந்ததால், கடந்த மாதம் 28ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், புதிதாக சிமென்ட் சிலாப் போட்டு மூடப்பட்டது.

இந்நிலையில், புதிதாக போடப்பட்ட சிமென்ட் சிலாப் இரண்டே நாளில் உடைந்துள்ளது.

இதனால், கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சேதமடைந்த சிலாப்பை அகற்றிவிட்டு தரமான சிலாப் வாயிலாக கால்வாயை மூட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கால்வாய் திறந்து கிடந்ததால், நெடுஞ்சாலைத் துறை சார்பில், புதிதாக சிமென்ட் சிலாப் போட்டு கால்வாய் மூடப்பட்டது. இரவு நேரத்தில், சாலையோரமாக சென்ற கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் கால்வாய் மீது சென்றதால் சிலாப் உடைந்து உள்ளது. இருப்பினும் 12 எம்.எம்., தடிமன் கொண்ட கம்பிகளுடன் சிமென்ட் கலவை வாயிலாக கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement