தனியார் நிலத்தை பறிக்க முடியாது!: கோர்ட் குட்டு
புதுடில்லி, 'பொதுநலனுக்காகவே இருந்தாலும், அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், அரசுக்கு இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள அதிகாரத்துக்கு நீதிபதிகள் எல்லைக்கோடு வரைந்துள்ளனர்.
---அரசியலமைப்பு சட்டத்தின், 39பி பிரிவு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தனியாரின் சொத்துக்களை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த உரிமையை, சட்டப்பிரிவு, 31சி பாதுகாக்கிறது.
நாடு முழுதும் இச்சட்டத்தை பயன்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் தனியார் நிலங்களை கையகப்படுத்துகின்றன. அதற்காக இழப்பீடு வழங்குகின்றன. இழப்பீடு நியாயமாக இல்லை என்று, நில உரிமையாளர்கள் போராடுவது அடிக்கடி நடக்கிறது.
மனம் வருவதில்லை
எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், நிலத்தை விட்டுக்கொடுக்க பலருக்கு மனம் வருவதில்லை.
இதுதவிர, என்ன நோக்கத்துக்காக நிலம் எடுப்பதாக அரசு சொல்கிறதோ, அந்த நோக்கத்துக்கு மாறாக நிலம் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் சகஜமாக எழுகிறது.
அப்படி பிரச்னை எழுந்த ஒரு நில ஆர்ஜித வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்து, வாதங்கள் நடந்து, 1977ல் தீர்ப்பு வந்தது. ஐந்து நீதிபதிகள் இடம் பெற்ற அமர்வின் அந்த தீர்ப்பு, 'அனைத்து தனியார் சொத்துக்களையும், சமூக நலனுக்கான பொது ஆதாரமாக அரசு கருத முடியாது' என்று கூறியது.
மாறுபட்ட விளக்கம்
அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி கிருஷ்ணய்யர் மட்டும், 'நிலம், வீடு முதலான அனைத்து சொத்துக்களும் நாட்டின் பொது ஆதாரமாக மதிக்கப்பட வேண்டும்; பொதுமக்கள் நலனுக்கு தேவைப்பட்டால், தனியாரின் எந்த சொத்தையும் அரசு கையகப்படுத்தலாம்' என்று கூறினார்.
மற்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டிய அரசியல் சட்ட ஷரத்துக்கு, அவர்கள் சொன்னதற்கு மாறுபட்ட விளக்கத்தை கொடுத்திருந்தார் கிருஷ்ணய்யர்.
அதாவது, பொது நலனுக்காக ஒரு நிலம் தேவைப்படுகிறது என்று அரசு தீர்மானித்து விட்டால், அதன் பிறகு அந்த நிலத்தின் உரிமையாளருக்கு அந்த சொத்தின் மீது எந்த உரிமையும் கிடையாது என்பது, அவர் கருத்து.
தனி மனிதர்கள் நலனை காட்டிலும், சமூக நலன் பெரிது என்ற சித்தாந்தம். பல பேர் அடங்கிய குழுவில், அவர் ஒருத்தர் தான் அவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால், அன்றைய காலகட்டத்தில், அந்த சித்தாந்தம் பெரிதாக மதிக்கப்பட்ட காரணத்தால்,
அதற்கு பிறகு வந்த நீதிபதிகள் கிருஷ்ணய்யரின் சட்ட விளக்கத்தையே சுவீகாரம் செய்தனர். பின்னர், 1982ல் ஒரு வழக்கில் ஏழு நீதிபதிகள் அமர்வும், கிருஷ்ணய்யரின் விளக்கத்தை ஒட்டி தீர்ப்பு வழங்கியது.
இந்த பின்னணியில் தான், 1986-ல் மஹாராஷ்டிரா அரசு, மும்பையில் பொதுமக்களுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டத்துக்கு, சில தனியார் நிலங்களை கையகப்படுத்த முனைந்தது. அதை எதிர்த்து நில உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு, 1992-ல் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடாக வந்தது. அரசு தன்னிச்சையாக நிலம் எடுப்பதாக, மேலும் சில வழக்குகளும் வந்தன.
அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, 2002ல் ஒன்பது நீதிபதிகள் இடம் பெற்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட், ரிஷிகேஷ் ராய், நாகரத்னா, சுதான்சு துலியா, பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா, ராஜேஸ் பிண்டல், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மைஸ் ஆகியோர் அந்த நீதிபதிகள். வாதங்கள் முடிந்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மூன்று தீர்ப்புகள் எழுதப்பட்டுள்ளன. ஏழு நீதிபதிகளின் ஒரே மாதிரியான தீர்ப்பை தலைமை நீதிபதி சந்திரசூட் எழுதினார்.
'பொது நலனுக்காகவே இருந்தாலும், எல்லா தனியார் சொத்துக்களையும், அரசு தன்னிச்சையாக கையகப்படுத்த முடியாது' என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஏற்றாலும், 1977ல் தீர்ப்பு எழுதிய நீதிபதி பற்றி, அதில் சந்திரசூட் சொல்லியிருக்கும் கருத்துக்கு, நாகரத்னா ஆட்சேபம் தெரிவித்துள்ளார். சுதான்சு துலியா, எட்டு பேரின் முடிவுக்கு எதிரான தீர்ப்பை எழுதியுள்ளாார். பெரும்பான்மை தீர்ப்பு தான் நடைமுறைக்கு வரும். அந்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின், 39பி பிரிவு கூறும் சமூக வளங்கள் என்பதில், தனியாருக்கு சொந்தமான நிலங்களும் அடங்குமா? சட்டப்பிரிவில் உள்ள வார்த்தைகள், தனியார் நிலமும் சமூக வளங்களில் அடங்கும் என்பதாக உள்ளது. ஆனாலும், 1977ல் அளித்த தீர்ப்பில், நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியது போல, அனைத்து தனியார் நிலங்களும், பொது சொத்துக்களே என்பதை நாங்கள் ஏற்கவில்லை.
சில குறிப்பிட்ட பிரிவு நிலங்களை தவிர, காரணங்களுக்காக தவிர, அனைத்து தனியார் நிலங்களையும், பொது ஆதாரமாக கருதி, அரசு கையகப்படுத்த முடியாது. அதற்கென வரைமுறைகள் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட நிலம், அதன் அமைவிடம், சமூக நலனுக்கு அது தேவைப்படுவதன் காரணம், கையகப்படுத்துவதால் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கம், நிலங்களுக்கான தட்டுப்பாடு, குறிப்பிட்ட சிலரிடம் அதிகளவில் இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள், சமூகத்தில், அதனால் நிகழக்கூடிய தாக்கம் போன்ற பல காரணங்களின் அடிப்படையிலேயே, தனியாரின் நிலங்களை பொதுச்சொத்தாக கருத முடியும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தனியார் சொத்துக்களை, பொது நலனுக்காக அரசுகள் கையகப்படுத்தலாம் என, நீதிபதி கிருஷ்ணய்யர், 1977ல் அளித்த தீர்ப்பை ரத்து செய்வதாகவும், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெரும்பான்மை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி பி.வி. நாகரத்னா தீர்ப்பில் கூறியுள்ளதாவது:நிலம் எடுக்கும் விஷயத்தில், அரசு களுக்கு அரசியலமைப்பு சட்டம் பெரும் அதிகாரத்தை அளித்துள்ளது. அதனடிப்படையில், நீதிபதி கிருஷ்ணய்யர் தன் உத்தரவை எழுதியிருக்கலாம். அரசியலமைப்பின், 42வது திருத்தத்தின்படி, சோஷலிஸ்ட் என்ற வார்த்தை அதில் சேர்க்கப்பட்டது. அதை, கிருஷ்ணய்யர் எதிரொலித்தாலும் குற்றமில்லை.அன்றைய சூழல், தேவைகளுக்கு பொருத்தமான தீர்ப்பு வழங்கியதற்காக, இன்றைய கோர்ட்டில் அவரை விமர்சனம் செய்வது சரியல்ல. இதே நீதிமன்றத்தில் பணியாற்றியவரை, தன் பணியை முறையாக செய்யவில்லை என, நாமே குற்றம்சாட்டுவது முறையல்ல. இப்படி ஒரு விமர்சனம், இங்கிருந்து வருவதை என்னால் நம்ப முடியவில்லை. பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு எதிராக செயல்பட்டதாக கருதுகிறேன்.
தலைமை நீதிபதியின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய உச்ச நீதிமன்றம் என்ற உயரிய அமைப்பு, எந்த ஒரு நீதிபதியையும் விட உயர்வானது. இவ்வாறு நாகரத்னா கூறினார்.நீதிபதி சுதான்சு துலியா, ''நீதிபதி கிருஷ்ணய்யர் மீதான தலைமை நீதிபதியின் விமர்சனங்களுக்கு என் மறுப்பை பதிவு செய்கிறேன். இதுபோன்ற கடுமையான விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம்,'' என்றார்.