உங்கள் ஊராட்சி... 'ஜல்ஜீவன்' பணி முடிந்ததாக கணக்கு காட்டியும் குடிநீர் வரலயே சித்தையகவுண்டன்பட்டியில் அடிப்படை வசதிக்கு மக்கள் தவிப்பு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தகோவில் ஊராட்சி, சித்தைய கவுண்டன்பட்டியில் ஜல்ஜீவன் பணி முடிந்ததாக கணக்கு காட்டினர். ஆனால் குடிநீர் வராததால் குடிநீரை விலைகொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் உள்ளனர்.

சித்தையகவுன்பட்டி கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் பல ஆண்டுகளாக ஒதுக்கீட்டின்படி கிடைக்கவில்லை. போர்வெல் மூலம் கிடைக்கும் உவர்ப்பு நீரை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் சுத்தம் செய்யாத சாக்கடை, புதர்மண்டி பயன்பாடு இல்லாத பெண்கள் சுகாதார வளாகம், பொது இடங்களில் குவிந்துள்ள குப்பையால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி போதுமான அளவு இல்லை. மழை காலங்களில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கிராமத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:

தண்ணீர் இன்றிய பூட்டிய சுகாதார வளாகம்

வீரணன்,சித்தைய கவுண்டன்பட்டியில் : பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இக்கிராமம் கடைசியில் இருப்பதால் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் வாரியமும் கண்டு கொள்ளவில்லை. புதிதாக துவக்கப்பட்ட ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் அனைத்து பணிகளும் முடிந்தும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக கணக்கு காட்டிவிட்டனர். ஆனால் இன்னும் குடிநீர் கிடைக்கவில்லை. பெண்களுக்கான பொது சுகாதார வளாகம் தண்ணீர் வசதியின்றி 10 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது. சுகாதார வளாகத்தைச்சுற்றி முட்செடிகள், புதர் வளர்ந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. தற்போது இப்பகுதி மக்கள் திட்ட மலையான் கோயில் செல்லும் ரோட்டின் ஓரங்களை திறந்தவெளிக்கழிப்பிடமாக்கி விட்டனர். இதனால் இப்பகுதியில் சுகாதார பாதிப்பால் நடந்து செல்ல முடியவில்லை. ஊராட்சி நிர்வாகத்தினர், அதிகாரிகள் பொதுமக்கள் தேவை குறித்து நேரில் ஆய்வு செய்வதும் இல்லை.

மழைநீர் வடிகால் வசதி இல்லை

கோவிந்தராஜ் சித்தைய கவுண்டன்பட்டியில் : சமுதாயக் கூடம், பள்ளி செல்லும் பாதையில் மழைக்காலத்தில் தேங்கும் நீரால் பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது. மழை நீர் வடிந்து செல்வதற்கு வடிகால் வசதி இல்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நாடக மேடையின் மேற்கூரை சேதமடைந்து மழைக்கு ஒழுகுகிறது. சீரமைக்க வேண்டும். குடிநீர் மேல்நிலைத் தொட்டியின் மேல் மூடி உடைந்துள்ளதால் தண்ணீருக்கு பாதுகாப்பு இல்லை. தண்ணீருடன் பறவைகளின் எச்சம், தூசுகள் கலந்து விடுகிறது. சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லை. இப்பகுதியில் போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருந்தகம் அருகே கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி கட்டப்பட்ட பின் தண்ணீர் நிரப்பவில்லை. ஆண், பெண்களுக்கான புதிய சுகாதார வளாகம் கட்டப்படவேண்டும். வாரம் ஒருமுறையாவது கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும். தெருவிளக்குகள் பல இடங்களில் எரியாததால் கிராமம் இருளில் மூழ்கி உள்ளது.

Advertisement