மகிழ்ச்சி வெங்காய விளைச்சல், விலை அதிகரிப்பால் விவசாயிகள் ஆந்திரா மழையால் வரத்து இன்றி கிலோ ரூ.50க்கு கொள்முதல்

போடி: தேனி மாவட்டத்தில் சின்ன வெங்காய விளைச்சலும்,விலையும் அதிகரித்துள்ளதாலும், ஆந்திரா மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் போடி, விசுவாசபுரம், பத்திரகாளிபுரம்,காமராஜபுரம், தேவாரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தேனி ஒன்றியம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். நடவு செய்த 60 நாட்களில் பலன் பெறலாம். கடந்த ஆண்டு கிலோ ரூ.25 முதல் 30 வரை விலை கிடைத்தது. கடந்த மாதம் விளைச்சல் அதிகரிப்பால் கிலோ ரூ.20 ஆக குறைந்தது. இந்நிலையில் ஆந்திராவில் பெய்த கன மழையால் வெங்காயம் விளைச்சல் பாதித்தது. அங்கிருந்து வரத்து இல்லை. இதனால் தேனி மாவட்டத்தில் வெங்காயம் விலை அதிகரித்தது. விளைச்சலும் அமோகமாக உள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.20 க்கு விற்ற வெங்காயம் தற்போது கிலோ ரூ.40 ஆகவும், தரம் பிரிக்கப்பட்ட வெங்காயம் ரூ. 50க்கும் விவசாயிகளிடம் வியாபாரிகள் வாங்குகின்றனர். மார்கெட்டில் தரம் பிரிக்கப்பட்ட வெங்காயம் சில்லரையில் கிலோ ரூ.60 வரை விற்பனை செய்கின்றனர்.

முருகன், விவசாயி, பத்திரகாளிபுரம் : கடந்த மாதம் வெங்காயம் நல்ல விளைச்சல் இருந்த நிலையில் கிலோ ரூ.20 க்கு விற்பனையானது. இதனால் உரம், மருந்து, எடுப்பு கூலிக்கு கூட கட்டுபடியாகாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆந்திராவில் கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதித்ததால் வெளி மாநிலங்களுக்கு வரத்து இல்லை. இதனால் தேனி மாவட்டத்தில் தற்போது வெங்காயம் விளைச்சலும், விலையும் அதிகரித்து உள்ளது. ஒரு குழி நிலத்தில் 30 குவிண்டால் (ஒரு குவிண்டால் 100 கிலோ) மகசூல் கிடைத்தது. தற்போது குழிக்கு 35 குவிண்டால் கிடைத்துள்ளது. தரம் பிரிக்காத வெங்காயம் ரூ. 35 முதல் 40 வரையும், தரம் பிரித்த வெங்காயம் மதுரை, திருச்சி வியாபாரிகள் கிலோ ரூ. 45 முதல் 50 விலைக்கு கொள்முதல் செய்கின்றனர். சில்லரை வியாபாரிகள் அதை கிலோ ரூ. 50 முதல் 60 வரை விற்பனை செய்து வருகின்றனர். வெங்காயம் விளைச்சல் மட்டுமின்றி நல்ல விலையும் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். என்றார்.

Advertisement