கழிவுநீர் தேங்குவதை தடுக்காததால் ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் ஜி.கல்லுப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை வார்டு மக்கள் பூட்டினர்.

ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி 12 வது வார்டில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி பகுதியில் பிற வார்டுகளிலிருந்து மழைக்காலங்களில் கழிவுநீர் 12 வது வார்டு வினோபாநகர் பள்ளிவாசல் தெருவில் தேங்குகிறது. கழிவுநீர் வீடுகளுக்குள் புகுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று முன்தினம் வினோபாநகர் மக்கள் மதியம் 12:00 மணிக்கு ஊராட்சி அலுவலகத்தை பூட்டினர்.

வார்டுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என கதவில் நோட்டீஸ் ஒட்டினர். ஊராட்சி தலைவர் மகேஸ்வரி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் மாலை 3:00 மணிக்கு பூட்டிய பூட்டு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று ஒன்றிய அலுவலகம் உதவி செயற்பொறியாளர் சேகரன் சாக்கடை கட்டுவதற்கு அளவீடுகள் செய்தார்.

--

Advertisement