கூவமாகும் தாமிரபரணி; கவுன்சிலர் போராட்டம்

திருநெல்வேலி, : திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். தி.மு.க., கவுன்சிலராக வெற்றி பெற்ற பவுல்ராஜ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

விளக்க கடிதம் அனுப்பியும் அவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படாததால், தாம் முற்றிலும் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது சுயேச்சை கவுன்சிலரான பவுல்ராஜ், நேற்று தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் குடத்துடன் நடைபயணமாக மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.

'தாமிரபரணியில் பல இடங்களில் கழிவு நீர் சேர்வது குறித்து நீதிமன்றமே குற்றம்சாட்டிய பிறகும் இன்னும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது' என பதாகையை கையில் ஏந்தியிருந்தார்.

மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, ''தற்போது, மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப்பணிகள் நடக்கின்றன.

''அவை முழுமையாக முடிந்து, பயன்பாட்டுக்கு வரும்போது சாக்கடை நீர் ஆற்றில் கலக்க வாய்ப்பில்லை. தற்போதும் நேரடியாக கலக்காமல் தடுப்புச் சுவர் ஏற்படுத்தி உள்ளோம்,'' என்று விளக்கம் அளித்தார்.

Advertisement