வங்கதேசத்தை 'வாஷ்அவுட்' ஆக்கிய இந்திய அணி: டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது

கான்பூர்: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 107/3 ரன் எடுத்திருந்தது. 2வது, 3வது நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. 4வது நாளான நேற்று (செப்.,30) இந்திய பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

மீதம் ஒன்றரை நாட்களே இருந்ததால், முதல் இன்னிங்சில் அதிரடியாக ரன்களை குவித்தது இந்திய அணி. 'டி-20' போல அதிரடி காட்டிய பேட்ஸ்மேன்களால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 285/9 ரன் எடுத்து, 52 ரன் முன்னிலையுடன் நேற்றே 'டிக்ளேர்' செய்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி, நான்காவது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்து 26 ரன்கள் பின் தங்கி இருந்தது.
Latest Tamil News

95 ரன்கள் இலக்கு




இன்று (அக்.,1) கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். ஆட்டத்தை டிராவில் முடிக்க வங்கதேச பேட்ஸ்மேன்கள் மெதுவாக ரன்கள் சேர்க்க முற்பட்டாலும், விக்கெட்டையும் பறிகொடுத்தனர். இறுதியில் 146 ரன்களுக்கு வங்கதேசம் ஆல்அவுட்டானது. இந்திய தரப்பில் அஷ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 95 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா (8), சுப்மன் கில் (6) ஏமாற்றினர். ஜெய்ஷ்வால் அதிரடியாக ரன்கள் சேர்க்க, விராட் கோஹ்லி அவருக்கு பக்கபலமாக இருந்தார்.
Latest Tamil News
அரைசதம் கடந்த ஜெய்ஷ்வால் (51) வெற்றி தருணத்தில் விக்கெட்டை இழந்தார். இறுதியில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றிப்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. கோஹ்லி (29), ரிஷப் பன்ட் (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 'டெஸ்ட் சாம்பியன்ஷிப்' பைனலுக்கான வாய்ப்பை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் இரு அணிகளும் விளையாட இருக்கிறது. முதல் போட்டி குவாலியரில் அக்டோபர் 6ல் நடக்கிறது.

Advertisement