மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் மீண்டும் போராட்டம்; பணி புறக்கணிப்பு: முதல்வர் மம்தா மீது அதிருப்தி

5

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் இன்று (அக்டோபர் 01) மீண்டும் டாக்டர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளனர். எங்கள் கோரிக்கைகளை அரசு சரியாக அணுகவில்லை என டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மேற்குவங்கம், கோல்கட்டா அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ம் தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மருத்துவ பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.


சுகாதார துறை செயலர், கோல்கட்டா போலீஸ் கமிஷனரை பணி இடமாற்றம் செய்ய வேண்டும், பணி செய்யும் இடங்களில் சி.சி.டி.வி., கேமரா உள்பட பாதுகாப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் மம்தா ஒப்புக்கொண்டார். செப்டம்பர் 21ம் தேதி முதல் டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.


ஆனால் டாக்டர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அரசு ஒப்புக் கொண்டபடி செயல்படுத்தவில்லை என கூறி ஜூனியர் டாக்டர்கள் இன்று (அக்டோபர் 01) மீண்டும் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கினர். 52வது நாள் போராட்டத்தை தொடங்கி இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். வேலை செய்யும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைகளை அரசு சரியாக அணுகவில்லை.


அதனால் போராட்டத்தில் மீண்டும் ஈடுபடுகிறோம். இதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர். மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஜூனியர் டாக்டர்கள் கண்டன பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Advertisement