ரூ.8 கோடி மதிப்பு சோமாஸ்கந்தர் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

3


சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.


மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார், ஐ.ஜி., தினகரன் தலைமையில், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்கள் குறித்து துப்பு துலக்கி வருகின்றனர். அதற்காக, தமிழக சிலைகளின் படங்கள் குறித்து, இணையதளங்களை ஆய்வு செய்த போது, காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் உலோகச்சிலை, அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருப்பதை இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி கண்டறிந்தார்.


இச்சிலையின் பீடத்தில், நான்கு வரியில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு இருப்பது பற்றி, கல்வெட்டு வல்லுனர்கள் உதவியுடன் ஆய்வு செய்த போது, ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு இச்சிலையை, தொண்டை மண்டலத்தை சேர்ந்த வெங்கட்ராமநாயனி பரிசாக வழங்கி இருப்பதை உறுதி செய்தனர்.

தற்போது, சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் ஆப் மியூசியத்தில் உள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு, 8 கோடி ரூபாய்.


இச்சிலை கடத்தல் தொடர்பாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சிலை விரைந்து மீட்கப்படும். மற்ற சிலைகள் குறித்தும் விசாரணை நடப்பதாக, மாநில சிலை திருட்டு தடுப்பு பிரிவு எஸ்.பி., சிவகுமார் தெரிவித்தார்.

Advertisement