பயிர் இழப்பீடு தர மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை அரசு பாதுகாக்கிறது

3


சென்னை : தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வௌியிட்டுள்ள அறிக்கை:

கடந்த, 2023ம் ஆண்டு மேட்டூர் அணையை ஜூன் 12ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை பயன்படுத்தி, காவிரி டெல்டா மாவட்டங்களில், 5 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி துவங்கியது. தண்ணீர் பற்றாக்குறையால், 2 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் அடியோடு அழிந்தன.



குறுவை காப்பீடு செய்ய, தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால், விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு கிடைக்கவில்லை.சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு வாயிலாக பணிகளை துவங்க, வேளாண் துறை அறிவுறுத்தியது. அதை ஏற்று விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ல் மேட்டூர் அணை வறண்டு போனதால், நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பருவமழையும் கைகொடுக்கவில்லை. இதனால், பாசன பற்றாக்குறை ஏற்பட்டு மகசூல் குறைந்தது. சம்பா பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இதுவரை முழுமையான இழப்பீடு கிடைக்கவில்லை.



காப்பீட்டு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு செயல்படுகின்றன. காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்வதும், இழப்பீடு பெற்று தருவதும் தமிழக அரசின் பொறுப்பு. ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் வாயிலாக,5,000 கோடி ரூபாய், 'பீரிமியம்' கட்டணமாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தப்படுகிறது.

ஆனால், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை, அந்நிறுவனங்கள் வழங்குவதில்லை. விவசாயிகளையும், காப்பீட்டு நிறுவனங்களையும் நேரில் அழைத்து பேச, வேளாண் துறை அச்சப்படுகிறது. காப்பீட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கிறது.


இதனால், வேறு வழியின்றி போராட வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம், 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. காப்பீட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து போராட்டத்தை ஒடுக்க அரசு முயற்சிக்கிறது.தமிழக அரசு மீது விவசாயிகள், நம்பிக்கையை இழந்து விட்டனர்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement