பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம்

திருப்பூர் : பிரிட்டனுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், விரைவில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக, வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

நட்பு நாடுகளுடனான, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.

இந்தியாவை பொறுத்தவரை, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஐக்கிய அரபு நாடுகள், கொரியா, மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.

கடந்தாண்டு, ஐரோப்பாவின் சில நாடுகளுடன் மட்டும், குறிப்பிட்ட வகை பொருட்களுக்கு மட்டும் ஒப்பந்தமாகியுள்ளது. நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி என்பது, அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் அதிகம் நடக்கிறது. எனவே, இந்நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதால், வர்த்தகம் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, பிரிட்டனுடனான ஒப்பந்தம் நிறைவேற்ற, 2021 முதல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்நாட்டுக்கு மட்டும், மாதம், 1,300 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்து வருகிறது. புதிய ஒப்பந்தம் ஏற்பட்டால், வர்த்தக வாய்ப்பு பலமடங்கு உயருமென கணக்கிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருந்தது. புதிதாக பொறுப்பேற்ற அரசு, அதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது; வெகு விரைவில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, வெளிநாட்டு வர்த்தக பிரிவு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ள நாடுகளுடன், வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. நமது அடுத்த இலக்கு, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தம். வெகுவிரைவில், பிரிட்டனுடனான ஒப்பந்தம் நிறைவேற வாய்ப்புள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதி உட்பட், நமது ஒட்டுமொத்த ஏற்றுமதி அபார வளர்ச்சி பெறும்,' என்றனர்.

இதனால் பசுமைசார் உற்பத்தியில் தனி அந்தஸ்து பெற்றுள்ள திருப்பூருக்கும், வர்த்தக வாய்ப்புகள் பிரகாசமாகும் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்றுமதியாளர்களும் காத்திருக்கின்றனர்.

Advertisement