நடுவானில் 4 மணி நேரம்; வட்டமடித்தது விமானம்; தப்பினார் பிரேசில் அதிபர்!


மெக்சிகோ: மெக்சிகோவில் பிரேசில் அதிபர் லூலா பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 4 மணி நேரமாக வானில் வட்டமடித்தது. பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.


மெக்சிகோவின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, பிரேசில் லூலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் விழாவில் பங்கேற்க மெக்சிகோ சென்று இருந்தார். கிளாடியா ஷீன்பாம் பதவியேற்றதைத் தொடர்ந்து, லூலா மீண்டும் பிரேசில் புறப்பட்டார்.


மெக்சிகோ நகரத்தை விட்டு வெளியேறிய பிறகு, பிரேசில் அதிபர் வந்த விமானம், தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொண்டது. மணிக்கணக்கில் விமானம் வானில் வட்டமிட்டது.
அனுபவம் மிகுந்தவரான விமானி, விமானத்தில் இருந்த அதிகப்படியான எரிபொருளை தீர்ப்பதற்காக இவ்வாறு வட்டமடித்தார். நான்கு மணி நேரம் விமானம் வட்டம் அடித்த நிலையில் பெருமளவு எரிபொருள் காலியானது.


இதன் பிறகு உள்ளூர் நேரப்படி இரவு 7.16 மணிக்கு ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதை பிரேசில் விமானப்படை உறுதி செய்தது. பிரேசில் அதிபர் லூலாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் பாதுகாப்பாக உள்ளார். "நாங்கள் தரையிறங்கினோம், அனைவரும் நலமாக உள்ளோம்" என பிரேசிலின் பத்திரிகை செயலாளர் ஜோஸ் கிறிஸ்பினியானோ தெரிவித்தார்.

Advertisement