களை கட்டியது விற்பனை; ஆன்லைனில் பொருள் வாங்க அலைபாய்ந்த மக்கள் கூட்டம்!

8

புதுடில்லி: அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அறிவித்த சிறப்பு விற்பனையில் கோடிக்கணக்கான பேர் பொருள் வாங்கியுள்ளனர்.



தற்போதுள்ள உலகம் கிட்டத்தட்ட ஆன்லைன் உலகமாகிவிட்டது. எதை வாங்க வேண்டும் என்றாலும் ஒரு மொபைல் போன் போதும். அதில் உள்ளே புகுந்து எந்த பொருள், எந்த விலையில் எங்கு விற்பனையாகிறது என்பதை தெரிந்து கொண்டு அடுத்த நொடியே அதை ஆர்டர் செய்து 24 மணிநேரத்துக்குள் அதை தனதாக்கிக் கொள்ள முடியும்.

இளைய தலைமுறையினர் மட்டுமல்லாது மூத்த குடிமக்களும் ஆன்லைன் விற்பனையை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளனர். வாடிக்கையாளர்களின் இந்த அதிகபட்ச ஆர்வத்தை குறிவைத்து முன்னணி ஆன்லைன் வர்த்தக தளங்கள் உச்சபட்ச தள்ளுபடி, மெகா சலுகைகளுடன் பொருட்கள் விற்பனையை தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில் முன்னணி இ காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்(Big billion days 2024) என்ற விற்பனையை செப்டம்பர் 30ம் தேதி தொடங்கியது. வாடிக்கையாளர்களுக்கு என பிரத்யேகமாக செப்டம்பர் 29ம் தேதியே மெகா தள்ளுபடியுடன் விற்பனையை தொடங்கி அசத்தியது.

எப்போது இந்த விற்பனை என்று காத்திருந்த வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்து அள்ளி குவித்துவிட்டனர். சலுகை அறிவித்த முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 33 கோடி வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் தளத்தில் உள்நுழைந்துள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் இந்த விகிதம் மிக அதிகம்.

மேலும், தினமும் செல்போன்கள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களுக்கான சலுகைகயை அறிந்து தேவையானவற்றை ஆர்டர் செய்துள்ளனர். பிளிப்கார்ட்டை போன்று அமேசான் தளத்தையும் அடி தூள் செய்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

பிரைம் வாடிக்கையாளர்களில் 11 கோடி பேர் தளத்தில் உள் நுழைந்து, 8000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொருட்களை வாங்கி குவித்துள்ளனர். 65 சதவீதம் வர்த்தகர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஆர்டர்கள் புக் ஆகி இருக்கின்றன.

பிளிப்கார்ட், அமேசான் போன்று மீஷோவையும் வாடிக்கையாளர்கள் விட்டு வைக்கவில்லை. 1.2 கோடி பேர் இந்த தளத்தில் உள்நுழைந்து விரும்பிய பொருட்களை அள்ளி உள்ளனர். குறிப்பாக சலுகை விற்பனையில் முதல் நாளில் பேஷன் தொடர்பான பொருட்களே அதிகம் விற்பனையாகின. முதன் முறை வாடிக்கையாளர்கள் என்ற வகையில் 15 ஆயிரம் பேர் மீஷோவை பயன்படுத்தி இருக்கின்றனர்.

Advertisement