வணிக சந்தையில் ஒரு வரப்பிரசாதம்; எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏகோபித்த வரவேற்பு!

21

புதுடில்லி: இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 8.93 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் 7.45 லட்சம் வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. அதாவது, 1.48 லட்சம் அதிகப்படியான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


வாகனங்கள் இல்லாத வீடும், வாகனங்கள் இல்லாத ரோடும் இந்த நவநாகரிக உலகில் இல்லை. வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் அணிவகுக்கும் காட்சியை தினமும் பார்க்கலாம். எரிபொருளை பயன்படுத்தி வாகனங்கள் விற்பனையான காலம் தற்போது கரைய ஆரம்பித்து எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் நகரும் காலம் தொடங்கி விட்டது.

அது உண்மை தான் என்று கட்டியம் கூறும் வகையில் நாட்டில், நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 8.93 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் 7.45 லட்சம் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.

கடந்த மாதமான செப்டம்பரில் மட்டும் அனைத்து மாடல்களிலும் கிட்டத்தட்ட 1.59 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்தாண்டில் இதே மாதத்தில் 1.29 லட்சமாக இருந்துள்ளது. அதாவது, முந்தைய ஆண்டை காட்டிலும் இந்தாண்டில் 23 சதவீதம் அதிகப்படியான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தாண்டின் செப்டம்பர் மாத தரவுகளின் படி எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை 90,000 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு இது வெறும் 64,000 என்று தான் இருந்தது. மிகவும் பிரபலமான ஓலா நிறுவனம் இந்த செப்டம்பரில் 24,659 வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. கடந்த மாதமான ஆகஸ்ட்டை ஒப்பிட்டு பார்க்கும் போது உற்பத்தி குறைந்திருந்தாலும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் இந்த நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

பஜாஜ் நிறுவன வாகனங்கள் செப்டம்பரில் 19,103 வாகனங்கள் உற்பத்தி செய்து 2வது இடத்தை பிடித்து இருக்கிறது. ஈத்தர் எனர்ஜி நிறுவனம் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தியதன் காரணமாக, 12,676 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்கள் மீது வாகன சந்தையில் வெவ்வேறான கருத்துகள் முரண்பட்டாலும், வாடிக்கையாளர்கள் அதை விரும்பி வாங்குவதே உற்பத்தி உயரக்காரணம் என்று கூறுகின்றனர் வணிக சந்தையை உற்றுநோக்குபவர்கள்.

Advertisement