டிம் சவுத்தீ விலகல்: நியூசிலாந்து கேப்டன் பதவியில் இருந்து

ஆக்லாந்து: நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தீ விலகினார். புதிய கேப்டனாக டாம் லதாம் நியமிக்கப்பட்டார்.

நியூசிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக, வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ 35, கடந்த 2022, டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான நியூசிலாந்து அணி, 14 டெஸ்டில், 6 வெற்றி, 2 'டிரா', 6 தோல்வியை பதிவு செய்தது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்தது நியூசிலாந்து.

அடுத்து இந்தியா வரவுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூருவில் வரும் அக். 16-20ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் புனே (அக். 24-28), மும்பையில் (நவ. 1-5) நடக்கவுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டிம் சவுத்தீ விலகினார்.

இதுவரை 102 டெஸ்ட் (382 விக்கெட்), 161 ஒருநாள் (221), 126 சர்வதேச 'டி-20'யில் (164) பங்கேற்றுள்ள இவர், அணியில் வீரராக நீடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதனால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக டாம் லதாம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர், 9 டெஸ்டில் (2020-22, 4 வெற்றி, 5 தோல்வி) நியூசிலாந்து அணியை வழிநடத்தி உள்ளார்.
டிம் சவுத்தீ கூறுகையில், ''அணியின் நலன் கருதி டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இனி, பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி அணியின் வெற்றிக்கு போராடுவேன். கேப்டன் பதவிக்கும் டாம் லதாம் பொருத்தமானவர். போட்டியில் இவருக்கு உதவியாக இருப்பேன்,'' என்றார்.

Advertisement