தசரா விழா மக்களுக்கு இடையூறாக ராட்டினங்கள் அப்புறப்படுத்த சப்- - கலெக்டர் உத்தரவு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக, தசார விழா நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி, 10 நாட்கள் தசரா விழா நடஒபெறும்.
அந்நாட்களில், சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னநத்தம், ஓசூரம்மன்கோவில், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், தசரா விழாவையொட்டி, அம்மன் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்படும்.

இந்த ஆண்டு தசரா விழா, இன்று துவங்கி, 13ம் தேதி வரை நடைபெறும். அனுமந்தபுத்தேரி பகுதியில், சிறிய, பெரிய ராட்டினம், பொழுபோக்கு அம்சங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், உணவக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ராட்டினங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்யவும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், பா.ஜ., நகரத் தலைவர் கஜேந்திரன், கடந்த 30ம் தேதி மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, சப்- - கலெக்டருக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

அதன்பின், சப்- - கலெக்டர் நாராயணசர்மா, தசரா விழா நடைபெறும் பகுதியில், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, விழா நடைபெறுவதற்கு, அனைத்து துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாதது தெரியவந்தது.

சான்றிதழ்கள் பெற்று விழாவை நடத்த வேண்டும். சாலையின் அருகில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ராட்டினங்களை அப்புறப்படுத்த வேண்டும்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர், சுகாதாரம், தற்காலிக கழிப்பறைகள் வைக்க வேண்டும். சுகாதார பணிகளை தினமும் நகராட்சி நிர்வாகம் செயல்படுத்த வேண்டும்.

உணவு பாதுகாப்புத் துறையினர், உணவகங்களில் தினமும் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

விழா துவங்கி முடியும் வரை, தினமும் செங்கல்பட்டு தாசில்தார் கண்காணிக்க வேண்டும். இரவு 10:30 மணி வரை மட்டுமே, பொழுதுபோக்கு ராட்டினங்கள் செயல்பட வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தாசில்தார் பூங்குழிலி, ஆணையர் ஆண்டவன், டி.எஸ்.பி., புகழேந்திகணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Advertisement