11 வயது மகள் சாட்சியம் தந்தைக்கு ஆயுள் தண்டனை

பெங்களூரு : கர்நாடக மாநிலம், உடுப்பி குந்தாபுரா மூடுபக்கே கிராமத்தை சேர்ந்தவர் ரவிராஜ் ஷெட்டி, 42. பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள, 'கார்கோ' கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுப்ரிதா, 35. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடக்கும்.

பெங்களூரின் ஹலசூரு அருகில் தம்பதி வசித்தனர். 2016 செப்டம்பர் 14ல் நடந்த தகராறில், மனைவியை ரவிராஜ் கத்தியால் 22 முறை குத்தி கொலை செய்தார். நடந்த சம்பவத்தை எல்.கே.ஜி., படித்த 5 வயது மகள் நேரில் பார்த்தார்.

ஆயினும் பயத்தில் அறைக்கு சென்று, உறங்குவது போன்று நடித்தார். ரவிராஜ், மனைவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, சுப்ரிதா தன் கழுத்தை, தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார்.

ஹலசூரு போலீசார் விசாரித்த போது, தன் தாயை கொலை செய்தது தந்தை என்பதை சிறுமி விவரித்தார்.

கடந்த 2022ல் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது 11 வயது சிறுமியாக இருந்த மகள், 'என் தந்தையே கொலைகாரர்' என திட்டவட்டமாக சாட்சியம் அளித்தார்.

இதையடுத்து, ரவிராஜுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Advertisement