என்.டி.டி.வி., வழக்கு: சி.பி.ஐ., முடித்துவைப்பு

புதுடில்லி, என்.டி.டி.வி.,யின் முன்னாள் இயக்குனர்களுக்கு எதிராக ஏழு ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட 48 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில், போதிய ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், வழக்கை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

என்.டி.டி.வி., நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர்கள் கடந்த 2008ல் பங்குச் சந்தைக்கு தெரிவிக்காமல், தங்கள் பங்குகளை அடமானம் வைத்து கடன் பெற்றதாகவும், கடன் தந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிக்கு 48 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகவும், 'குவான்டம் சர்வீசஸ்' நிறுவனத்தின் சஞ்சய் தத் என்பவர் புகார் அளித்தார்.

அதன் விபரம்:

என்.டி.டி.வி.,யின் முன்னாள் இயக்குனர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் தொடர்புடைய 'ஆர்.ஆர்.பி.ஆர்., ஹோல்டிங்ஸ்' நிறுவனம், என்.டி.டி.வி.,யின் 20 சதவீத பங்குகளை வாங்க, 'இந்தியா புல்ஸ்' நிறுவனத்திடம் இருந்து 2008 ஜூலையில் 500 கோடி ரூபாய் கடன் பெற்றது.

அடமானம்



இந்தியா புல்சிடம் பெற்ற கடனை அடைக்க, 2008 அக்டோபரில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிடம் 375 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இதற்காக பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் தங்களின் பங்குகளை அடமானம் வைத்தனர்; 350 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்தியுள்ளனர்.

இதில், ஐ.சி.ஐ.சி.ஐ.,க்கு வட்டி, அசல் என மொத்தம் 48 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடமோ, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடமோ பங்கு அடமானம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் மீது, சி.பி.ஐ., 2017ல் வழக்கு பதிவு செய்தது; அதைத் தொடர்ந்து, அவர்களின் இடங்களில் சோதனை நடத்தியது.

அறிக்கை தாக்கல்



அப்போது, என்.டி.டி.வி., தரப்பில், 'நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே கடனாக வாங்கிய பணத்தை திருப்பி அளித்துவிட்டோம்; செபிக்கும் தகவல் தெரிவித்தோம்' என்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் முறைகேடு தொடர்பான சட்டப்பூர்வ ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால், வழக்கை கைவிடுவதாக சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ., நேற்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நீதிமன்றம் அந்த அறிக்கையை ஏற்றால், வழக்கு முடிவுக்கு வரும்; இல்லையெனில், சி.பி.ஐ., விசாரணையை தொடர வேண்டியிருக்கும்.

Advertisement