நேரடியாக கலைத்திருவிழா கல்வித்துறை அறிவிப்பு வட்டாரத்துக்கு ரூ.25ஆயிரம் ஒதுக்கீடு 

உடுமலை : அரசுப்பள்ளி மாணவர்களுக்கான குறுவளமையம் மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை, நேரடியாக நடத்துவதற்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கான 'கலைத்திருவிழா' போட்டிகள் கல்வியாண்டுதோறும் நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் துவங்கி, இறுதியில் மாநில அளவிலான போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் மற்றும் கலையரசி, கலையரசன் பட்டமும் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான போட்டிகளில், பள்ளி, குறுவளமையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை 'ஆன்லைன்' வாயிலாக நடத்தி, அந்த பதிவுகளை பள்ளிக்கல்வி மேலாண்மை இணையத்தளத்தில் பதிவு செய்வதற்கு கல்வித்துறை அறிவுறுத்தியது.

இதன்படி, பள்ளி அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அவை வீடியோ பதிவு செய்யப்பட்டு, 'எமிஸ்' தளத்தில் ஏற்றப்பட்டன. ஆனால், அதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.

இதனால், தற்போது குறுமையம் மற்றும் வட்டார அளவிலான போட்டிகளை, நேரடியாக நடத்துவதற்கு கல்வித்துறை அறிவித்துள்ளது. இப்போட்டிகளை நடத்துவதற்கு, ஒவ்வொரு வட்டாரத்துக்கும், 25 ஆயிரம் ரூபாயும் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.

போட்டிகளை நடத்துவதற்கு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக, ஏற்பாடுகளை செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறுவளமைய அளவிலான போட்டிகள் அக்., 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது.

வட்டார அளவிலான போட்டிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அக்., 22 முதல் 24ம் தேதி வரையிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அக்., 15ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலும், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அக்., 21ம் தேதி முதல், 24ம் தேதி வரையிலும் நடக்கிறது.

போட்டிகளில் முதலிடத்தில் வெற்றி பெறுவோர் மட்டுமே, அடுத்தகட்ட போட்டிக்கு தகுதி பெறுகின்றனர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement