வேலை பெற்றவர் 1.39 லட்சம் பேர்; வெள்ளை அறிக்கையை சொல்லாமலே வெளியிட்டது அரசு!

8

சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 2021ம் ஆண்டிற்கு பிறகு 46 புதிய தொழிற் சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 46 ஆலைகள் திறக்கப்பட்டு 1,39,725 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள், திட்டங்கள் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அடிக்கடி கேட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று (அக்.,03) தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2021ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி துவங்கிய பின் 2030ம் ஆண்டிற்குள் தமிழகம் ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் துவங்கப்பட்டன.



முதலீட்டாளர்கள்




முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.



ஒப்பந்தங்கள்




மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளும் உறுதி செய்யப்பட்டன. அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழக இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.



அவதூறான கருத்து




தொழில் வளர்ச்சியில் புரிந்து வரும் சாதனைகளால் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் 2021ம் ஆண்டிற்கு பிறகு 46 புதிய தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. 46 ஆலைகள் திறக்கப்பட்டு 1,39,725 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு பயணத்தால் தொழில்கள் வரவில்லையே என எதிர்க்கட்சியினர் பொறாமையால் புழுங்குகின்றனர்.


மக்களிடம் தவறான தகவலைத் தந்து ஆட்சிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை விதைக்க முயல்கிறார்கள். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்ததாக மத்திய அரசின் புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement