இந்திய கலாசாரத்தில் மகிழ்ந்த ஜமைக்கா பிரதமர்!

புதுடில்லி: "இந்தியாவில் ஆன்மிகமும், கலாசாரம் சார்ந்த இடங்களும் மிகவும் பிடித்துள்ளது," என ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூவ் ஹோல்னஸ் தெரிவித்துள்ளார்.


இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக, ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூவ் ஹோல்னஸ் வந்துள்ளார். அவர், புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் உள்ள, மத்திய அரங்கம், அரசியல் அரங்கம், வளாகங்கள், பார்வையாளர்கள் அரங்கம் உள்ளிட்ட இடங்களை தனது அதிகாரிகளுடன் சுற்றிப்பார்த்தார்.


முன்னதாக, வாரணாசியில் நடந்த கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து, வர்த்தக வசதி மையம், கைவினைப்பொருள் கண்காட்சி, சாரநாத் மியூசியம் ஆகியவற்றையும் சுற்றிப்பார்த்து ரசித்தார்.

அவர் கூறியதாவது:
நான் இந்தியாவில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வந்தேன். இந்தியாவில் இது என்னுடைய முதல் நேரடி அனுபவம். நான் இந்திய கலாசாரத்தையும், ஆன்மிகத்தையும் மிகவும் மதிக்கிறேன்.

இந்தியாவுடனான ஜமைக்காவின் நட்பு, இரு தரப்புக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த உறவை ஆழப்படுத்தவும், நீடித்து இருக்கவும் விரும்புகிறேன். சர்வதேச அளவில், இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. மிகவும் பலம் வாய்ந்த நாடாகவும் இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் முக்கியத்துவம் குறித்து பேசினோம்.


மேற்கு இந்திய தீவுகளில் கடந்த ஜூனில் நடந்த 2024 டி-20 உலககோப்பை தொடரில், இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கும் கடந்த மாதம் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement