சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

10

புதுடில்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அமைச்சரவை, இதற்காக ரூ.63,246 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது.


சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 119 கி.மீ., தூரத்தில் மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடந்து வருகிறது. இத்திட்டமானது மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றுக்கு இடையே 50: 50 விகிதத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. 3 வழித்தடங்களில் 120 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
முதல் வழித்தடமானது மாதவரம் முதல் சிப்காட் வரையிலும்


2வது வழித்தடம் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரையிலும்

3வது வழித்தடம் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் அமைக்கப்படுகிறது.


இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருந்தது. சமீபத்தில் டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்த போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்து இருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக ரூ.63,246 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கூட்டம் முடிந்த பிறகு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: வேகமாக வளர்ந்து வரும் நகரான சென்னை மிக முக்கிய பொருளாதார மையமாகும். நகரத்திற்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவது முக்கியம். பொருளாதார மையமாக சென்னை உள்ளதால் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் 2027ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மோடி வாழ்த்து!



பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், சென்னை மெட்ரோ திட்டம் போக்குவரத்தை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்; பரபரப்பான நகரில் மக்கள் வாழ்வை எளிதாக்கும் எனக்கூறியுள்ளார்.

Advertisement