இந்தியாவில் வசிப்பவரிடம் ஓட்டு கேட்ட டிரம்ப்: வைரலாகும் சமூக வலைதள பதிவு

2

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப்பிற்கு ஆதரவாக இந்தியாவில் வசிப்பவரிடம் 'எக்ஸ்' சமூக வலைதளம் மூலம் சார்பில் ஓட்டு கேட்டதும், அதற்கு அவர் அளித்த பதிலும் வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும் களமிறங்கி உள்ளனர். தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


'எக்ஸ்' சமூக வலைதளத்தில் டிரம்ப்பிற்கு ஆதரவாக பிரசாரம் நடந்து வருகிறது. இந்த வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், டிரம்ப்பிற்கு ஆதரவாக உள்ளார்.

இந்த வலைதளத்தில் டிரம்ப்பின் கணக்கில் இருந்து 'ஆட்டோமேட்டட்' முறையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆதரவு கேட்டு செய்தி அனுப்பப்படுகிறது.அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த ரோஷன் ராய் என்பவருக்காக, டிரம்ப் சார்பில் பதிவிட்டுள்ளதாவது: வடக்கு கரோலினாவில் இருந்து நான் உங்களுக்கு முக்கியமான தேர்தல் செய்தியை அனுப்புகிறேன். வரும் நவ.,5 ல் டிரம்ப்பிற்கு ஆதரவாக ஓட்டுப் போட தயாராகுங்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு இருந்தது.

இதற்கு ரோஷன் ராய், பதில் அளித்து வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நன்றி. ஆனால், நீங்கள் எப்போதும் எனது அதிபராக இருக்க முடியாது. கமலா ஹாரீசும் எனது அதிபராக இருக்க முடியாது. உண்மையில் நான் இந்தியாவில் வசிக்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், கிண்டல் செய்து பல வகையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

எக்ஸ், சமூக வலைதளத்தில் டிரம்ப் இல்லை. அவர் தனியாக 'ட்ரூத்' என்ற சமூக வலைதளத்தை நடத்தி வருகிறார். ஆனால், அவர் சார்பில் ஊழியர்கள் தானியங்கி முறையில் இந்த பதிவுகளை அனுப்பி வருகின்றனர்.

Advertisement