மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பாலி கிளினிக் துவங்கப்படுமா? பல்கலை அமைந்ததால் கைவிடப்பட்ட நிலை

தேனி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. பிற மாவட்டங்களை விட இங்கு பசுக்கள், காளைகள், கோழிகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேனி, போடி, பெரியகுளத்தில் மட்டுமே கால்நடை மருத்துவமனை உள்ளது. மற்ற ஊர்களில் மருந்தகங்கள், கிளை நிலையங்கள் உள்ளன. நோய் தாக்குதல், அவசர சிகிச்சை என்றால் கால்நடை வைத்திருப்போர் சிகிச்சை பெற திண்டாடுகின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு கால்நடை பாலி கிளினிக் திறக்க அரசு உத்தரவிட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாலி கிளினிக் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் மட்டும் திறக்கவில்லை. பாலி கிளினிக்கில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.. அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ள வசதி இருக்கும். ஆனால் என்ன காரணத்தினாலோ தேனி மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்படவில்லை. அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் உள்ள தேனி மாவட்டத்தில் பாலி கிளினிக் துவங்க அரசு உத்தரவிட கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறையினர் கூறுகையில், பாலி கிளினிக் அமைக்க நடவடிககைகள் எடுக்கப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தேனி அருகே கால்நடை பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதால், பாலி கிளினிக் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது என்கின்றனர்.

தொற்று நோய் பரவுதல், அவசர அறுவை சிகிச்சைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் பார்ப்பது உள்ளிட்டவற்றிற்கு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது. எனவே தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாலி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement