தொடரும் துப்பாக்கிச்சூடு; திண்டுக்கல்லில் தப்பியோடிய ரவுடியை சுட்டுபிடித்த போலீசார்

10

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.


கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் நடந்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார்.


மேலும், கேரளாவில் ஏ.டி.எம்.,களில் கொள்ளையடித்து விட்டு, கண்டெய்னர் லாரியில் வந்த வடமாநில கும்பலைச் சேர்ந்த கொள்ளையனை நாமக்கல் போலீசார் என்கவுன்டர் செய்தனர். இப்படி, தமிழகத்தில் அடுத்தடுத்து என்கவுன்டர் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதிமன்றமே, அதிருப்தியை தெரிவித்திருந்தது.


இந்த நிலையில், திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி ரிச்சர்ட் சச்சின் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.


பஸ் ஸ்டாண்ட் அருகே இர்பான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுதங்களைப் பதுக்கி வைத்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, போலீஸ்காரர் அருணை ரிச்சர்ட் சச்சின் தாக்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர், அங்கிருந்து தப்பியோட முயன்றதாகவும், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ரிச்சர்ட் சச்சின் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ரவுடி தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் அருணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement