உ.பி.,யில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்; ஆசிரியர், மனைவி, 2 குழந்தைகள் சுட்டுக்கொலை

3

லக்னோ: உத்தரபிரதேசம் அமேதியில், பள்ளி ஆசிரியர், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் பள்ளி ஆசிரியர் சுனில் குமார், அவரது மனைவி பூனம் மற்றும் அவர்களது 5, 2 வயதுடைய இரு மகள்கள் வசித்து வந்தனர். அவர்களது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், பள்ளி ஆசிரியர் சுனில் குமார், அவரது மனைவி, குழந்தைகள் 2 பேர் உட்பட 4 பேரும் உயிரிழந்தனர்.


கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. குற்றத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. விரிவான விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று அமேதி மாவட்டத்தில் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மன்னிக்க முடியாதது. குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்த துயர நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருடன் உத்தரபிரதேச அரசு நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் தப்ப முடியாது. அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement