போடியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

போடி : போடி பகுதியில் நேற்று மதியம் பலத்த காற்று இடியுடன் பெய்த கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து வர துவங்கியது.

போடி பகுதியில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. கடந்த மாதம் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை, தட்டப் பயறு, அவரை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். பயிர்கள் வளர்ந்த நிலையில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் மழையை எதிர் நோக்கி விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 3 :15 மணிக்கு போடி, குரங்கணி, கொட்டகுடி, சிலமலை, சூலப்புரம், ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது. போடி காமராஜ் பஜார், போஜன் பார்க், உள்ளிட்ட மெயின் ரோடுகளில் மழைநீர் ஓடை போல பெருக்கெடுத்து சென்றது. மலைப் பகுதியில் பெய்த கன மழையால் கொட்டகுடி ஆற்று பகுதியில் நீர்வரத்து வர துவங்கியது.

தொடர்ந்து மழை 4 மணி வரை தொடர்ந்தது. இதனால் மழையை எதிர் பார்த்து காத்து கிடந்த விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement