பூமி பூஜை போட்டாச்சே... த.வெ.க.,வின் முதல் மாநாட்டிற்கு அடிக்கல் நாட்டிய நிர்வாகிகள்

3

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான அடிக்கல்லை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாட்டினார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், அக்., 27ல், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். இதற்காக, போலீஸ் அனுமதி பெறப்பட்டது. மாநாடு நடத்துவதற்கு 17 நிபந்தனைகளை, விழுப்புரம் மாவட்ட போலீசார் விதித்துள்ளனர்.

2026 சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து செயல்படும் விஜய், சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட இருக்கிறார். இதற்கு அடித்தளமாக இந்த மாநாடு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, திராவிட கட்சியின் கொள்கைகளை ஒத்தே விஜய்யின் செயல்பாடுகளும் இருந்து வரும் நிலையில், இந்த மாநாட்டில் தான் கட்சியின் கொள்கையையும், கட்சி சின்னத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து நடிகர் விஜய் விளக்க உள்ளார். எனவே, இந்த மாநாட்டை அவரது கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது, பிற கட்சியினரும் எதிர்பார்த்துள்ளனர்.

மாநாட்டிற்கு வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மது அருந்தி மாநாட்டிற்கு வரக்கூடாது என்றும், போலீசார், அதிகாரிகளை மதித்து நடக்க வேண்டும் உள்ளிட்ட எட்டு நிபந்தனைகளை விஜய் விதித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த மாநாட்டுக்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா இன்று அதிகாலை நடந்தது. இதில், த.வெ.க., பொதுச்செயலாளர் ஆனந்த், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கொண்டு வரப்பட்ட புனித நீரை ஊற்றி, முதல் மாநாட்டுக்கான பந்தக்காலை நாட்டினார். இந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement