ரூ.25 லட்சம் லஞ்சம்; சிக்கினார் என்.ஐ.ஏ., அதிகாரி; தட்டி தூக்கியது சி.பி.ஐ.,

11

பாட்னா: பயங்கரவாத குற்றச்சாட்டில் இருந்து குடும்பத்தை காப்பாற்ற ரூ.2.5 கோடி லஞ்சம் கேட்ட, என்.ஐ.ஏ., அதிகாரி, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.



பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த தொழில் அதிபர் ராக்கி யாதவ். இவர் மீது உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு உள்ளது. இந்த வழக்கை என்.ஐ., ஏ., அதிகாரி அஜய் பிரதாப் சிங் விசாரித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர், 2.5 கோடி லஞ்சம் தராவிட்டால், குடும்பத்தினரையும் வழக்கில் சேர்த்துவிடுவேன் என ராக்கி யாதவ்-ஐ மிரட்டி உள்ளார். ராக்கி யாதவ் முதற்கட்டமாக, ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து, அஜய் பிரதாப் சிங் பணம் பறிப்பதாக, தொழில் அதிபர் ராக்கி யாதவ் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.


இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்சம் பெற்ற என்.ஐ.ஏ., அதிகாரி அஜய் பிரதாப் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜய் பிரதாப் சிங்கிற்கு சொந்தமான பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.20 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பு விசாரணை அமைப்பான என்.ஐ.ஏ., அதிகாரியே லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement