ரூ.400 கோடி மோசடி... அம்பலமான நெஞ்சு வலி நாடகம்; காங்., எம்.எல்.ஏ.,வின் மகனை தட்டி தூக்கிய போலீஸ்

9

குருகிராம்: வீடு கட்டித் தருவதாக ரூ.400 கோடி மோசடி செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வின் மகனின் தில்லாலங்கடி வேலைகள் சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் அம்பலமானது.


ஹரியானாவின் சமல்ஹா தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தரம் சிங் சோக்கர். இவரும், இவரது மகன் சிக்கந்தர் சிங்கும் மிஹிரா குரூப் எனும் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். 2021-22ம் ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் மூலம் வீடு கட்டித் தருவதாக சுமார் 1,500 பேரிடம் ரூ.400 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக குருகிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்த வழக்கை கடந்த 2023ம் ஆண்டு அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த செப்., 2ம் தேதி சிக்கந்தர் சிங்கை கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர். அப்போது, அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைப் போல நாடகமாடி, 16ம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றார்.


அதன்பிறகு மீண்டும் கைது நடவடிக்கை மேற்கொள்ளும் போது, மறுபடியும் உடல்நலம் சரியில்லை என்று கூறி, செப்.,26ம் தேதி முதல் நேற்று வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இந்த நிலையில், மருத்துவமனையின் சி.சி.டி.வி., காட்சிகளை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்த போது, அவர் சாதாரணமாக மருத்துவமனைக்கு வெளியே உலா வந்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. போலீஸ் கஸ்டடியில் இருப்பதை மீறி, காரில் ஏறி, பார்ட்டிகளுக்கு செல்வதும், ஹரியானா தேர்தலுக்காக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.


இது தொடர்பான சி.சி.டி.வி., காட்சிகள் வெளியான நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., தரம் சிங் சோக்கர் சரண்டர் ஆகவில்லை எனில், அவரை கைது செய்ய அமலாக்கத்துறை மற்றும் ஹரியானா போலீசாருக்கு அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான தரம் சிங் சோக்கர் , ஹரியானா முன்னாள் முதல்வர் புபேந்திர் சிங் ஹூடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

Advertisement