ஆளுக்கு ஒரு கேன்...! நீ இங்க வா மேன்! தடம்புரண்ட சரக்கு ரயிலில் டீசலை அள்ளிய மக்கள்

3

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலில் இருந்த டேங்கரில் கொட்டிய டீசலை ஊர் மக்கள் ஆளாளுக்கு அள்ளிக் கொண்டு பறந்தனர்.

மத்திய பிரதேசம் ரத்லம் அருகே டீசல் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று ராஜ்கோட்டில் இருந்து போபால் அருகே உள்ள பகானியா-போரி என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. ரத்லம் ரயில் நிலையம் சென்றடையும் ஒரு கிலோ மீட்டர் முன்பாக எதிர்பாராத விதமாக தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்தன.

இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள் மீட்பு பணிக்கு உத்தரவிட்டு உள்ளதோடு விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் சரக்கு ரயிலில் இருந்த டேங்கரில் கொட்டிய டீசலை ஊர் மக்கள் ஆளாளுக்கு பிடித்துச் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ரயில் டேங்கரில் டீசல் இருப்பதை அறிந்த ஆண்கள்,பெண்கள் அங்கு திரண்டனர். கையோடு கொண்டு சென்றிருந்த பக்கெட்டுகள், கேன்கள் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிக் கொண்டு பறந்தனர். சிலர் சிறு, சிறு பிளாஸ்டிக் கேன்களில் கிடைத்த டீசலை நிரப்பிக் கொண்டனர்.

டீசல் மாசடைந்து இருக்கிறதே என்ற எந்த கவலையும் இல்லாமல், இஷ்டம் போல அள்ளிக் கொண்டு தங்கள் வாகனங்களில் ஜெட் வேகத்தில் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.

Advertisement